• சிறப்பாக நடைபெற்ற கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  img-20161110-wa0010

  கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

                09-11-2016 அன்று காலை 1030மணி அளவில் கடலூர் மாவட்டத்தலைவர் தோழர். G. கோவிந்தராஜூலு தலைமையில் கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று அமைப்புச் செயலர் தோழர். R. வேலாயுதம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். சி. முத்துகுமாரசாமி பேசினார்.

              திருச்சி மாநிலச் செயற்குழு முடிவுகள், BSNLEU AIC நன்கொடை, 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள், AIBDPA மாநில மாநாட்டு நிதி, 78.2சத பஞ்சப்படி இணைப்பு நிலுவைத்தொகை நிதி என அனைத்து விபரங்களையும் விளக்கியதோடு இன்றைய அரசியல் நிலவரங்களையும் விளக்கமாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை நிகழ்த்தினார்.

              மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தை வாழ்த்தி மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி பேசினார். உரிய கால அவகாசத்தில் AIBDPA மாநில மாநாட்டு நிதி, 78.2சத பஞ்சப்படி இணைப்பு நிலுவைத்தொகை நிதி, BSNLEU AIC நன்கொடைகளை வசூலிப்பது என்றும் வரும் 2017 ஜனவரி20ம் தேதிக்குள் மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில் மாவட்டப் பொருளாளர் தோழர். V. மணி நன்றி கூறினார்.

 • LIFE CERTIFICATE – உயிர் சான்று புதுப்பிக்கப்பட்டதா ?

   LIFE CERTIFICATE

           ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும் / குடும்ப ஓய்வூதியர்களும் தங்களின் “உயிர்ச்சான்று” LIFE CERTIFICATE  புதுப்பிப்பது கட்டாம். அந்தச் சான்றை கொடுக்கவில்லை என்றால் டிசம்பர் மாத ஓய்வூதியம் கிடைப்பது சிரமமாகும். எனவே அனைத்து ஓய்வூதியரும் / குடும்ப ஓய்வூதியர்களும் தாங்கள் ஓய்வூதியம் பெரும் அஞ்சலகம் அல்லது வங்கிகளில் LIFE CERTIFICATE டை உடனே வழங்கிட வேண்டும் என மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

          அதேபோல் ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களும் தாங்கள் பயன்படுத்தும் REDOT தொலைபேசிகளுக்கும்  LIFE CERTIFICATE  கொடுக்க வேண்டும்.

                 அனைத்து மாவட்டச் செயலர்களும் உரிய கவனம் செலுத்தி LIFE CERTIFICATE  கொடுத்திட ஏற்பாடுகளைச் செய்யவும்.

 • சபாஷ் ! சரியான தீர்ப்பு

  சமவேலைக்கு சம ஊதியம் கட்டாயம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  மத்திய, மாநில அரசுகளின் லாப வேட்டை / ஊதியச் சுரண்டல் இதன் மூலம் தடுக்கப்படுகிறது.  தற்காலிக / ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிடு – உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.

               சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணிக்கு அமர்த்தப்பட்ட ஒவ்வொரு ஊழியர்க்கும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத முறையிலும் பொருந்தக்கூடியது என்று நீதிபதிகள் J S கேஹர் மற்றும் S A போப்டே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் 26-10-2016 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.  தீர்ப்பில் கீழ்க்கண்ட கருத்துக்களையும் தெரிவித்துள்ளது.

  1. உழைப்பின் பலனை எந்த ஒரு செயற்கையான அளவுகோல் மூலமும் தீர்மானிப்பது தவறான அணுகுமுறையாகும்.

  2. ஒரே மாதிரி வேலையிலும் பொறுப்பிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியருக்கு, அதே மாதிரி வேலையிலும் பொறுப்பிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிரந்தர ஊழியரை விட குறைவான ஊதியம் கொடுக்ககூடாது.

  3. மக்கள் நலன் சார்ந்த அரசில் இது கூடவே கூடாது.

  4. இது குறைத்து மதிப்பிடும் செயல் மட்டும் அல்ல, ஒரு மனிதனுடைய கண்ணியத்திற்கும் வேட்டு வைக்கும் செயல் ஆகும். இந்த அடிப்படை கொள்கை பற்றி உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புக்களை வழங்கி அதைச் சட்டமாக்கியுள்ளது.

  5. குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் எந்த ஒரு தொழிலாளியும் தானாக விரும்பி செய்வதில்லை. தன்னுடைய சுமரியாதையையும் கண்ணியத்தையையும் விட்டுக்கொடுத்து தன்னுடைய குடும்பத்தின் உணவு உறைவிடத்திற்காக அவ்வாறு வேலை செய்கின்றார். அந்தக் குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ள வில்லையென்றால் தன்னை நம்பியிருக்கின்ற குடும்பம் பெருத்த பாதிப்பை அடையும் என்று அறிந்த காரணத்தால் குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்கின்றார். குறைவான சம்பளம் கொடுக்கும் நடவடிக்கை என்பது சுரண்டப்படும் அடிமைத்தனத்தை உருவாக்கும் அதிகார அடக்குமுறையின் வெளிப்பாடே ஆகும்.

  6. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இப்படிப்பட்ட நடவடிக்கை அடக்குமுறை, ஒடுக்குமுறை மட்டுமல்ல  பலவந்தமாக திணிக்கபடும் நடவடிக்கை.

  7. அடிமைத்தனத்தை கட்டாயப்படுத்துகிறது.

            பஞ்சாபில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பஞ்சாப் உயர் நீதி மன்றத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை பஞ்சாப் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்காலிக ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் போன்று வேலை செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் சம சம்பளம் பெறுவதிற்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் பஞ்சாப் உயர் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

             இந்திய நாடு சர்வதேச சமூக, பொருளாதார, கலாச்சார உரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதால் சம வேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை இந்திய நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

                சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அதன் மூலம் நிரந்தர ஊழியர்கள் பெற்று வரும் சம்பளத்தை பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு என்றும் மேற்கண்ட தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

      சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு 1979 ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அதற்கான இசைவு ஒப்புதலையும் அளித்துள்ளது. அரசியலமைப்பின் வெவ்வேறு விதிகளின் படியும், அரசியலமைப்பு 141 விதியின்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் சம வேலைக்கு சம சம்பளம் என்ற கடமையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தற்காலிக ஊழியர் என்றாலும் நிரந்தர ஊழியர் என்றாலும் சம வேலைக்கு சம சம்பளம் என்ற உரிமை தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமலும் ஒவ்வொரு தொழிலாளி வசம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் பறை சாற்றியுள்ளது.

             இந்த தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு தொழிலுக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுமா என்று ஆளும் வர்க்கம் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் சூழ் நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையை மறுபடியும் உச்ச நீதிமன்றம் உயிர்த்தெழச் செய்துள்ளது.

             இந்த தீர்ப்பு அனைத்து தொழிலாளர்களுக்கும் மட்டுமல்ல ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மிக அதிக அளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
           கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக புதிய ஆளெடுப்புத் தடைச்சட்டம் அமுலில் உள்ளது. மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் பொதுத்துறை என அனைத்து பதவிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்கள் பெருகி விட்டனர். BSNL நிறுவனம் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த ஊழியர்கள் 50 % எண்ணிக்கையை நெருங்கி விட்டனர். அவர்களுக்கு அற்ப சம்பளம், கொடுமையான சுரண்டல் என்பது அன்றாட நடவடிக்கை ஆகிவிட்டது.

     எனவே இந்த தீர்ப்பை இந்திய தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்களும் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். தீர்ப்பை அமுல்படுத்தப்படும் நாளை எதிர் நோக்கியுள்ளனர்.

           ஆனால் மோடியின் தலைமையிலான மத்தியஅரசு இந்த தீர்ப்பின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது?

              குறைந்த அற்ப சம்பளத்திற்கு இந்திய நாட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக உள்ளனர் எனவே இந்தியாவில் தொழில் துவங்க வாருங்கள் என்று உலக முதலாளிகளுக்கு அழைப்பு விடும் மோடி அரசு இந்த தீர்ப்பை அமுல்படுத்துமா?

    இந்திய நாட்டு தொழிலாளர் நலச் சட்டங்களையே முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் மோடி அரசு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுமா? உச்ச நீதிமன்றத்தின் உன்னத தீர்ப்பை அமுல்படுத்துமா ?

  தீர்ப்பை அமுல்படுத்த தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம் !

  ஒன்றுபட்டு போராடுவோம் !

  இதுவே சரியான மார்க்கம் என்பதில் அச்சமில்லை !

  அதற்கான பணியை தொடர்ந்து செய்வோம் ! !

  அனைவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம் பெறுவோம் !!!