• மறைந்துவிடுமா கருப்புப்பணம் ?

  செல்லாதையா செல்லாது.. 500ம் 1000ம் செல்லாது… !

                08.11.2016 அன்று இரவு பாரத பிரதமர் மோடி அவர்கள் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்தார்.

           09.11.2016 அன்று வங்கிகளும் ATMகளும் செயல்படாது என்றும், 10.11.2016 முதல் வங்கிகளில் பழைய ரூபாய்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் 10.11.2016 முதல் ஒரு சில ATMகள் செயல்படும் என்றும் தெரிவித்தார். புதியதாக 500 ரூபாய் நோட்டுக்களும், 2000 ரூபாய் நோட்டுக்களும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

               பழைய ரூபாய்களை 30.12.2016க்குள் தங்களின் ஆதாரங்களை காட்டி வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதற்கு பின் 31.03.2017 வரை தகுந்த காரணங்களை RBIயிடம் தெரிவித்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் ஒழிப்பதற்காகவும், தீவிரவாதிகளின் பணப்பரிமாற்றத்தை தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இவையெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

                         1978ஆம் ஆண்டு இது போல 1000, 5000, 10,000 ரூபாய்கள் தடை செய்யப்பட்டது. ஆனால் 38 ஆண்டுகள் ஆன பின்பு தற்போது பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் கருப்புப் பணம் இருப்பதாக அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

                                             நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ள சூழ்நிலையில் மக்களின் மனதை திசை திருப்புவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

                         எது எப்படியோ, இரண்டு நாட்களாக மக்களின் பாடு திண்டாட்டம் தான். தற்போது ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக இன்றைக்கு கீழ் நடுத்தர குடும்பத்தில் கூட 500 ரூபாய் என்பது சாதாரணமாக புழங்குகிறது. ATMகளில் 500 ரூபாய் மட்டும் எடுத்தால் கூட ஒரே 500 ரூபாய் தான் வரும். 100ரூபாய் நோட்டுக்களின் புழக்கமே குறைந்து விட்ட நிலையில் இது போன்ற திடீர் அறிவிப்பால் அனைத்து பகுதி மக்களும் திண்டாடிக் கொண்டு தான் உள்ளனர். 10.11.2016 காலை முதல் வங்கிகளில் உள்ள வரிசை இதை தெளிவாக தெரிவிக்கிறது. இரண்டு நாட்களாக ஏழை எளிய நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் நகைக் கடைகளில் வியாபாரம் கன ஜோர் தான். கருப்புப் பணம் எல்லாம் மஞ்சள் பணமாக மாறிவிட்டது போலும்.

  நன்றி – BSNLEUTNC.com