• உற்சாகமாக நடைபெற்ற பாண்டி மாநிலச் செயற்குழு

  சிறப்பாக நடைபெற்ற  பாண்டி மாநிலச் செயற்குழு.

  Jpeg

  Jpeg

                26-08-2017அன்று பாண்டிச்சேரியில் வைத்து மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி தலைமையில் AIBDPA  மாநிலச் செயற்குழு நடைபெற்றது. முன்னதாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசியக் கொடியை மூத்த தோழர். மதியழகனும், சங்கக் கொடியை அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர்.  

    தியாகிகளுக்கு அஞ்சலியை மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி நடத்தியதுடன் தலைமைஉரையும் செய்தார். வரவேற்புக் குழு சார்பில் பாண்டிச்சேரி மாவட்டச் செயலர் தோழர்.  S. சக்திவேலும் மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமியும் வரவேற்புரை நிகழ்த்தினர்.

  Jpeg

  Jpeg

       அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K. G. ஜெயராஜ் செயற்குழுவை துவக்கி வைத்து உரையாற்றினார். பாண்டிச்சேரி தொலைத்தொடர்பு பொது மேலாளர் திரு. R. மார்ஷல் அந்தோணி லியோ நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கினார். அனைத்திந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ், அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத், BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.  A. சுப்பிரமணியன், TNTCWU மாவட்டச்செயலர் தோழர். B. மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  Jpeg

      மாநிலச்செயலர் தோழர். C. K. நரசிம்மன் செயல்பாட்டு அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையினையும் அறிமுகம் செய்து உரையாற்றினார். வந்திருந்த மாவட்டச்செயலர்கள் மற்றும் மாநிலச் சங்க பிரதிநிதிகளும்  தங்களின் கருத்துக்களை பதிவு செய்த பின் செயல்பாட்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேணடும், 1.1.2017 முதல் உயர்ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் கொண்டவரப்பட்டு ஏகமனதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

         தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற சாதி ஆணவப்படு கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரி சேலம் முதல் சென்னை வரை நடைபெற்ற 360 கிலோமீட்டர் நடைபயணத்தில் கலந்து  கொண்டு சிறை சென்ற மாநில உதவித்தலைவர் தோழர். P.ராமசாமி, தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோரை பாராட்டியதோடு சால்வை அணிவிக்கப்பட்டது.  

     தங்கும் இடம், அருமையான உணவு என செயற்குழுவை நடத்திட சிறப்பான ஏற்பாடுகளை செய்த பாண்டிச்சேரி மாவட்ட AIBDPA, BSNLEU, TNTCWU  சங்கங்கள்  மற்றும் மாவட்டச் செயலர் தோழர். சக்திவேலுவை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. நிறைவாக மாநில உதவிச்செயலர் தோழர். C. ஞானசேகரன் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

 • ஜாக்டோ – ஜியோ 22.08.2017ல் அடையாள வேலைநிறுத்தம் !

  தமிழகம் முழுவதும் 22.08.2017 ஒருநாள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம். 

   

       பத்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்குபெறும் அடையாள வேலைநிறுத்தம் 22-08-2017 அன்று தமிழகத்தில் நடைபெறுகிறது.

  கோரிக்கைகள் :-

  1) 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமுல்படுத்த வேண்டும் !

  2) இடைக்கால நிவாரணமாக 20சதவீதம் வழங்க வேண்டும் !

  3) புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் !

  4) தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி உட்பட பல்வேறு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் !

            ஆகிய 4 முக்கிய  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 05ம்    தேதி சென்னையில் பேரணி நடத்திய பின் நாளை 22.08.2017 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துகின்றனர். கோரிக்கைகள் வெற்றி பெறாவிட்டால் 2017 செடம்பர் 07 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேலைநிறுத்தம் வெற்றிபெற வாழ்த்துவதோடு AIBDPA தோழர்கள் ஆதரவு இயக்கங்களில் பங்குபெறவும் தமிழ்நாடு AIBDPA சங்கம் கேட்டுக்கொள்கிறது.

 • அரசு வங்கிகளில் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

  2017 ஆகஸ்ட்-22 பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்குபெரும் வேலை நிறுத்தம் !

   

  வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை அதானி, மல்லையா போன்ற மலைபாம்புகள் விழுங்குவதை தடுக்க; தனியார் மயத்தை முறியடிக்க 2017 ஆகஸ்ட்-22ல் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ! 

  கோரிக்கைகள் அனைத்தும் பொது மக்களுக்கானது, வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கானது.

  வங்கி ஊழியர்கள் போராட்ட களத்தில் வைத்துள்ள கோரிக்கைகள் :..

  1. 1) வங்கி சீர்திருத்தங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

  2) பொது துறை வங்கிகளின் இணைப்பை கைவிட வேண்டும்.

  3) கார்பரேட் நிறுவனங்களின் வராக்கடனை தள்ளுபடி செய்யாமல் வசூலிக்க வேண்டும்.

  4) கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  5) தள்ளுபடி செய்யப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் வராக்கடன்களை ஈடுகட்ட, வங்கி வாடிக்கையாளர்களிடம்

  சேவைக்கட்டணத்தை அதிகரித்து வசூலிக்க  கூடாது !

  இந்த கோரிக்கைளில் எங்காவது வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் உள்ளனவா, இல்லை ; மாறாக வங்கிகளின்  கொள்ளைகளை  தடுக்க ….?

             ஸ்டேட் வங்கிகளின் கடனை வசூலிக்கும் உரிமை, தனது கடனை செலுத்தாத வராக்கடன் சலுகைகளை பெற்றுள்ள, அம்பானிகளின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் கம்பெனி, சாமான்ய விவசாயிகள் கடன் கல்வி கடன் சிறு தொழில் கடன் வசூலிப்பதில் அடியாட்களை பயன்படுத்தி மிரட்டி வசூலிக்கிறது. ஸ்டேட் பேங்குளில் கடன் பெற்றவர்கள் கடனை முழுவதும் வங்கியில் திருப்பி செலுத்தினாலும், கடன் செலுத்தி முடித்ததற்கான சான்றினை ரிலையன்ஸ் கம்பெனியிடமிருந்து மட்டுமே பெறமுடியும். வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைளில் ஒரு சிறு துளிதான் இது. இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு எதிரான பொதுமக்களுக்கு எதிரான, கார்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான போக்கை சீர்திருத்தம் என்ற பெயரில் பலமுனைகளில் அரசு எடுத்துள்ளது.

         வங்கி தொழில், கார்பரேட் கம்பெனிகளுக்கானது என்பதிலிருந்து மக்களுக்கானது என்பது மாற வேண்டுமாயின் வங்கி ஊழியர்களின் போராட்டத்தை மக்களாகிய நாம் ஆதரிப்பதே நல்லது. வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவு இயக்கங்களில் பங்கெடுப்போம் !!!

 • இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் !

  போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க 71வது சுதந்திரதினத்தில் சபதமேற்போம் !

 • தூத்துக்குடியில் கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்

  தூத்துக்குடியில் கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம்.

  Jpeg

  Jpeg

  Jpeg

     தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதி பொதுக்குழுக்கூட்டம் 12.08.2017 அன்று கோவில்பட்டி தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அஞ்சலிஉரை நிகழ்த்தினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

       மாவட்டச் செயலர் தோழர். P. ராமர்மாவட்டச் செயல்பாடுகள், கடந்த கூட்டத்திற்கு பின் நடைபெற்ற மத்தியச் சங்க அறைகூவல் போராட்டங்கள், BSNL அதிகாரிகள் ஊழியர் சங்க போராட்டங்களில் கலந்து கொண்ட விபரங்களையும் இன்றைய நடைமுறை அரசியல் பிரச்சனைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

         பின்னர் அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் 78.2% சத நிலுவைத்தொகையில் உள்ள பிரச்சனைகளையும் நமது சங்கம் எடுத்த நடவடிக்கையின் மூலம் கிடைத்த மருத்துவப்படி மற்றும் இலவச தொலைபேசி அழைப்பு என போராட்டங்களின் வெற்றியை எடுத்துரைத்தார். மேலும் ஓய்வூதிய உயர்வு பெற போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். பணமதிப்பு இழப்பு, கால்நடை பராமரிப்பு வரன்முறைச் சட்டம் 2017, நீட் தேர்வு, GSTவரி விதிப்பு பாதிப்பு இவற்றால் தொழில்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்புகளையும் புள்ளி விபரங்களோடு விளக்கிப் பேசினார். இன்றைய அரசியல் நடைமுறையில் மக்கள் படும் துன்பங்களையும் பொருளாதார இழப்புகளையும் விளக்கி கூறினார்.

    30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிய உறுப்பினராக தோழர். A. தங்கவேல்பாண்டி ஆயுள் சந்தா வழங்கினார். தோழர். S. ஸ்டீபன் ஜெயபால் நன்கொடை வழங்கினார் நிறைவாக மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். K.சுப்பையா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 • நாமக்கல்லில் புதிய கிளை உதயம்

  சேலம் மாவட்டத்தில்   நாமக்கல்லில் புதிய AIBDPA கிளை உதயம்.

         நாமக்கல் NGO ஹாலில் 12.08.2017 அன்று சேலம் மாவட்ட செயற்குழுவும் நாமக்கல் பகுதி புதிய கிளை துவக்க நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் ஓய்வூதியர் தோழர். V. கோபால் STS RTD சிறப்பான முயற்சியின் காரணமாக 25 தோழர்களிடம் உடனே ஆண்டுச் சந்தா வசூலித்து அவர்களின் ஆதரவுடன் புதிய AIBDPA கிளையை நாமக்கல்லில் துவங்கப்பட்டது. கிளை துவக்க நிகழ்ச்சிக்கு தோழர். V. கோபால் STS Rtd தலைமையேற்றார். மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். N. சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்ததோடு சிறப்புரையும் ஆற்றினர். ABDPA ஈரோடு மாவட்டத் தலைவர் தோழர். சிவஞானம், நாமக்கல் BSNLEU கிளைச் செயலர் தோழர். பாலசுப்பிரமணியன், BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர். ராமசாமி, BSNLEU JCM உறுப்பினர் தோழர். K.M. செல்வராஜ், AIBDPA மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். T. பழனி வாழ்த்துரை வழங்கினர். 

           நிகழ்ச்சியின் நிறைவாக கிளையின் புதிய நிர்வாகிகளாக

  கிளைத் தலைவர் தோழர். A. அங்குராஜ், TM Rtd

  கிளச் செயலர் தோழர். V. கோபால், STS Rtd

  கிளைப் பொருளாளர் தோழர். V..K. ராமசாமி

  ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

       புதிதாக துவங்கப்பட்ட   கிளையையும், அதன் நிர்வாகிகளையும், கிளை துவங்க பாடுபட்ட அனைத்து தோழர்களையும் சேலம் மாவட்டச் சங்கமும், தமிழ்மாநிலச் சங்கமும் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

       பின்னர் மாவட்டச் செயற்குழு மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். I. M. மதியழகன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு மாவட்டச் செயல்பாட்டறிக்கையை முன் வைத்துஉரை நிகழ்த்தினார்.   

         மாவட்டச் சங்க செயல்பாடு, அமைப்பு நிலை, விவாதிக்கப்பட்டது.  திருச்செங்கோடு, மேட்டூர், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளில் புதிய கிளை துவங்கிட ஆலோசிக்கப்பட்டது.  மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புச்சாமி, மாநில அமைப்புச் செயலர் தோழர். N. சின்னையன் ஆகியோர்  மாவட்டச் செயற்குழுவில்  சிறப்புரை ஆற்றினர்.

   

 • அபாய அறிவிப்பு !!! உங்களுக்கு மாத கூலி 8333 ரூபாயா ?

  உங்களுக்கு மாத கூலி 8333/- ரூபாயா ?

  ஓய்வூதியர்களும் தப்பவில்லை !

  நீங்கள் பணக்காரர் !

  கேஸ் (எரிவாயு) – மானியம்-ரேசன் பொருட்கள் “கட்!”

     களமிறங்கி குரல் எழுப்பும் மாதர் சங்கம் ஆதரவளிப்போம் நமது உரிமைகளை பாதுகாக்க !

  1) ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் இருந்தால் –

  2) வருமான வரி செலுத்தும் ஒரு நபரை கொண்ட குடும்பம்,

  3) தொழில் வரி செலுத்துபவரை கொண்ட குடும்பம்,

  4) ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாய குடும்பம்,

  5) மத்திய, மாநில, மாநகர, நகராட்சி, தன்னார்வ அமைப்புகளில் பணிபுரிபவர்கள்,

  6) அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பம்,

  7) நான்கு சக்கர வாகனம் வைத்துள்ள குடும்பங்கள்,

  8) 3 கான்கிரீட் அறை வைத்துள்ள குடும்பங்கள் ஆகியவற்றிற்கு

  இனி ரேசன் பொருட்கள் விநியோகம்  கிடையாது.

     ரேசனில் எந்தப் பொருட்களும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. 5 ஏக்கர் நிலம் இருந்தும் விவசாயக் கடனில் மூழ்கி இறந்துக் கொண்டுள்ள நிலையில் – வறட்சி, விவசாய பாதிப்பால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் போதுமான வருமானமில்லாமல் பட்டினிக் கிடக்கும் அவல நிலையும் தொடரும் சூழலில் – ரேசன் பொருட்களும் கிடைக்காவிட்டால் தமிழக மக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். மேலும், பெண்கள் குடும்பங்களை வழி நடத்த முடியாமல் அன்றாட வாழ்வே பெரும் சுமையாகவே மாறிவிடும் அபாயமும் உள்ளது.

         அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது ரேசனில் கிடைக்கும் இலவச அரிசியும், மானிய விலை பருப்பு, பாமாயில், சக்கரை, மண்ணெண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள்தான் ஏழை, எளிய மக்களை பாதுகாத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள ‘ரேசன் ரத்து’ என்ற அறிவிப்பு பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

      சிலிண்டருக்கான மானியம் ரத்து என்ற அறிவிப்பும், மாதமாதம் ரூ.4 வரை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதும் மேலும் ஒரு அதிர்ச்சியினை பொது மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. 90 சதவீதம் குடும்பங்கள் கேஸ் சிலிண்டரை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. காடுகள் அழிந்து, விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி, ஆடு, மாடுகளின் வளர்ப்பு குறைந்துள்ள நிலையில் கிராமப்புற மக்களுக்கு கூட சுள்ளி, விறகு, சாணம் போன்ற எரிபொருட்களும் கிடைக்காமல் சிலிண்டரையே நம்பியுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

           இந்நிலையில் சிலிண்டர் மானியம் ரத்து என்ற அறிவிப்பு நகர்ப்புறம் – கிராமப்புறம் என அனைத்து பகுதி குடும்பங்களையும் பாதிக்கும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தினால் ரேசனில் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தொடர்ந்து “இடதுசாரிகள்” உள்ளிட்ட பல அமைப்புகள் போராடி வந்தும் தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திட ஒப்புதல் அளித்துவிட்டு, மத்திய அரசின் அறிவிப்பு தமிழகத்தை பாதிக்காது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மூலம் அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் மத்திய அரசின் எந்தவொரு திட்டத்தையும் நடவடிக்கையையும் விமர்சிக்காத தமிழக அரசின் மெத்தனப் போக்கை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. தமிழகம் முழுவதும் ரேசன் / கேஸ் மானியம் ரத்து நடவடிக்கைகளை எதிர்த்து வலுவாக குரல் எழுப்ப மாதர் சங்க மாவட்ட குழுக்களும் பொது மக்களும் முன்வர வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறைகூவல்.

      இந்த பாதிப்புகள் ஓய்வூதியர்களை மேலும் பாதிக்கச்செய்வதால் நாமும் இப்போராட்டங்களில் குடும்பத்தோடு கலந்து கொள்வோம்.