• வெற்றிகரமாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட “காத்திருப்பு போராட்டம்”

  வெற்றிகரமாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட “காத்திருப்பு போராட்டம்”.

        Bsnl MRS திட்டத்தின் without vouchar முறையில் மருத்துவப்படி வசதியினை விரும்பும் ஓய்வூதியர்களுக்கு பரிச்சார்த்த அடிப்படையில் ஏப்ரல் 2017 மற்றும் ஜூலை 2017 காலாண்டு மருத்துவப்படி அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையிலும் நாகர்கோவில் மாவட்டத்தில் மட்டும் அதற்கான அடிப்படை பணிகூட நடைபெறாமல் இன்று வரை மருத்துவப்படி வசதி வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாக அதற்கான பணியினை தொடங்கிடக்கோரியும் உடனடியாக கணக்கீடு முடித்து தாமதமின்றி வழங்கக் கோரியும்காத்திருப்பு போராட்டம்” மாவட்டத்தலைவர் தோழர். சாகுல் ஹமீது தலைமையில்  19-02-2018 அன்று காலை 1000 மணி முதல் 1300மணி வரை நாகர்கோவில் GM bsnl அலுவலகத்தில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். மீனாக்ஷி சுந்தரம் பேசினார். போராட்டத்தை வாழ்த்தி Benleu மாவட்டசெயலாளர் தோழர். ராஜு உரையாற்றினார்.

   

          AIBDPA தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும், நாகர்கோவில் DGM bsnlஐ தொடர்பு கொண்டும் நாகர்கோவில் சங்கத்திற்கு வழங்கிய ஆலோசனையின்படி DGMஐ மாவட்டச் செயலர் சந்தித்தார். ஓய்வூதியர்களின் பிரச்சனைகளில் உள்ள மெத்தனப்போக்கு சுட்டி காண்பிக்கப்பட்டது. அவரும் நேரடி கவனம் செலுத்தி விரைவான தீர்விற்கு உதவுவதாக தெரிவித்ததால் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

               உரிய நேரத்தில் கவனம் செலுத்தி போராடிய நாகர்கோவில் மாவட்டத் தோழர்களையும் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்ப்பதாக அறிவித்த மாநில, மாவட்ட நிர்வாகத்தையும் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

  போராட்டமின்றி எதுவும் நடக்காது ! வாழ்த்துக்கள் !!

 • நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  உற்சாகமாய் நடைபெற்ற  நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

              நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 12.02.2018 அன்று காலை 11மணி அளவில் நாகர்கோவில் நகர YMCA ஹாலில் வைத்து மாவட்ட உதவித் தலைவர் தோழர். V. சங்கரலிங்கம் தலைமையில் உற்சாகமாய் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். மீனாட்சி சுந்தரம் அஞ்சலி உரையினை நிகழ்த்தியதோடு வந்திருந்த தோழர்களை வரவேற்று வரவேற்புரையும்  நிகழ்த்தினார். மேலும் மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.  

   

       அகில  இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தை துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார். தனது துவக்க உரையில் இன்றைய அரசியல் சூழல், பென்ஷனர் பிரச்சனைகள், மக்களின் பிரச்சனைகள் என விரிவான உரையாற்றினார். நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் விரிவான சிறப்புரை ஆற்றினார். தனது சிறப்புரையில் மாவட்ட அளவில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள், AIBDPA கடந்து வந்த போராட்டப்பாதை, அதனால் ஓய்வூதியர்களுக்கு கிடைத்திட்ட பொருளாதார பலன்கள், சந்தித்த இடையூறுகள், தொடரும் போராட்டங்கள், பட்ஜெட் 2018 – இன்றைய அரசியல் சூழல் மாற்றம் அடையாத வருமான உச்சவரம்பு, மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் என விரிவாக பேசினார். கூட்ட முடிவில் மாவட்ட மாவட்டப்பொருளாளர் தோழர். A. அரிஹரன் மாவட்ட வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதோடு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 • தோழர். இந்திரா பணி நிறைவு பாராட்டுவிழா

  தோழர்.V.P. இந்திரா பணி நிறைவு பாராட்டுவிழா.

   

   

         

          மத்திய அரசின் தபால்தந்தி துறையில் பணியை துவங்கி  DOT – BSNL நிறுவனத்தில் 38 ஆண்டுகள் சேவை முடித்து 31.01.2018ல் பணி நிறைவு செய்த தோழர். V. P. இந்திராவுக்கு நாகர்கோவில் Y.R. மஹாலில் நேற்று 12.02.2018ல் பணி நிறைவு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரசு பணி, சமூகபணி, சமுதாயபணி, பெண்கள் முன்றேற்றம், தொழிலாளர் நலன், சங்கப் பணி என அனைத்திலும் பல பரிணாமங்களில் பணி செய்தாலும் குடும்ப பணியையும் சிறப்புடன் செய்த தோழர். V. P. இந்திராவின்  பணி ஓய்வுகாலம் சிறக்க  AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.  சமூக மற்றும் பெண்கள் முன்றேற்ற பணியில் கூடுதல் கவனம் செலுத்தி மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

     பணி நிறைவு பாராட்டு விழாவில் AIBDPA தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அனைத்திந்திய அமைப்பு செயலர் தோழர்.  K. காளிபிரசாத், மாநில உதவிச் செயலர் தோழர். பங்கஜவல்லி, மாவட்டச் செயலர்கள் தோழர். மீனாட்சி சுந்தரம் (நாகர்கோவில்), தோழர். P. ராமர் (தூத்துக்குடி), தோழர். D. கோபாலன் (நெல்லை) மற்றும் நாகர்கோவில், நெல்லை ஓய்வூதியர் சங்கத் தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

 • தோழர். முகமது அமீன் CITU முன்னாள் பொதுச் செயலர் மறைவு

  தோழர்.முகமதுஅமீனுக்கு செவ்வணக்கம் !

           சிஐடியூ-வின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர். முகமதுஅமீன் (வயது 89)  காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

         2007 முதல் 2010 வரை சிஐடியூ-வின் அகில இந்திய பொதுச்செயலாளர்.
  1969 முதல் 2004 வரை (1988முதல் 1994 வரை பாராளுமன்ற மேலவை உறுப்பினர்) மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர். பலகாலம் வங்காள மாநில அமைச்சர்.

           1942-ல் தனது 14 வயதில் சணல் தொழிலாளி.18-வயதில்–1946-ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தேசப்பிரிவினையின் சோகம் சுமந்தவர். பிரிவினையை ஒட்டி 1950களின் துவக்கத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கு கட்சி இவரை செல்ல கட்டளையிட்டது. அங்கேயும் கலகக்குரல் எழுப்பினர். அங்கு சிறைச்சாலையில் 26 மாதங்கள். பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
  முறையான கல்வி கிடையாது. இரவு பள்ளிகளில் இங்கிலீஷ் கற்றார். சணல், பீடி, ஜவுளி, இன்ஜினியரிங் தொழிலாளர்களை திரட்டினார்.
  சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளிலும் அடக்கம், ஆரவாரம் இல்லாமல் வர்க்க பணி செய்தவர். BSNLEU சங்கத்துடன் நீண்டகாலம் பரிச்சயம் உண்டு.

            உருது மொழியில் நல்ல புலமை மிக்கவர். சிஜடியூ கூட்டங்களில் புரட்சிகரமான உருது கவிதைகளை எடுத்து விடுவார். கம்யூனிஸ்ட் எளிமையின் அடையாளம் தோழர். அமீன். தோழருக்கு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் செய்வதோடு அவர்தம் பிரிவால் துயருரும் குடும்பத்தினர்களுக்கும் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் !

 • காரைக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  சிறப்பாக நடைபெற்ற  காரைக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

   

            08-02-2018 காலை 11மணி அளவில் காரைக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம்  தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட உதவித் தலைவர் தோழர். V.V. ராமன், DE RTD தோழர். தாசில் உட்பட பல தோழர்கள் மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனகள் குறித்து விவாதித்தனர். 

          நிறைவாக தலமட்ட மற்றும் மாநில அளவில் தீரக்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் அதன் தீர்விற்க்கான வழிகளையும் விரிவாக விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மேலும் 78.2 சத நிலுவைத்தொகை பெற்றது, மருத்துவப்படி பெற்றது, BSNL நிறுவனத்தை காக்க நடைபெறும் போராட்டங்கள், ஓய்வூதியமாற்ற பிரச்சனையில் நமது பங்களிப்பும் அதற்காக நடைபெற்ற போராட்டங்கள், இன்றைய அரசியல் சூழல், பட்ஜெட் 2018ல் பாதக அம்சங்களையும் விளக்கி பேசினார்.

      மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது என்றும் சங்கத்தை வலுப்படுத்திடவும் புதிய கிளைகளை ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் சென்னையில் இருப்பதால் மாவட்டச் சங்கத்தை நிர்வகிக்க தோழர். M. ராதாகிருஷ்ணன் பொறுப்பு மாவட்டச் செயலராக செயல்பட கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கூட்ட முடிவில்பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர். M. ராதாகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 • மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு கூட்டம்

  மதுரை விரிவடைந்த மாவட்டச்செயற்குழு கூட்டம்.

        07-02-2018 காலை 11மணி அளவில் மதுரை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் மாவட்ட உதவித்தலைவர் தோழர். K. ஜாண் போர்ஜியா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். A. ஆதீஸ்வரன் அஞ்சலி உரையாற்றினார். பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர். மேனுவல் பால்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச்செயலர் தோழர் M. செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

          நிறைவாக மாநில அளவில் தீரக்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் அதில் தீர்விற்க்கான வழிகளையும் விரிவாக விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மேலும் இன்றைய அரசியல் சூழல், பட்ஜெட் 2018ல் பாதக அம்சங்கள், ஓய்வூதியமாற்ற பிரச்சனையில் நமது பங்களிப்பும்  அதற்காக நடைபெற்ற போராட்டங்களையும் விளக்கி பேசினார்.

     மாவட்ட மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை  மாவட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.  செயற்குழுவில் கிளைகளை அமைப்பது எனவும் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது என்றும்  முடிவு செய்யப்பட்டது. மேலும் 2018 ஏப்ரல் முதல் அல்லது 2வது வாரத்தில் மாவட்ட மாநாட்டையும், தமிழ் மாநில செயற்குழுவையும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 • உற்சாகமாய் நடைபெற்ற கோவை முப்பெரும் விழா

  கோவையில் சிறப்பாக நடைபெற்ற  கொடிக்கம்பம் அமைப்பு, தகவல் பலகை திறப்பு, பொதுக்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா 

                 கோவையில் கொடிக்கம்பம் அமைப்பு, தகவல் பலகை திறப்பு, பொதுக்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா இன்று 06.02.2018 சிறப்பாக நடைபெற்றது.

              நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக கோவை GM அலுவலக நுழைவு வாசலில் புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் சங்கக் கொடியினை கோவை  மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியை வாழ்த்தி BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

        பின்னர் நடைபெற்ற சங்க தகவல் பலகையை மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் திறந்து வைத்தார்.

       அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டச் செயற்குழு தோழர். K. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு மாவட்ட மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை விரிவாக கூறினார். தோழர். குடியரசு அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.  செயற்குழுவில் கிளைகளை அமைப்பது எனவும் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது என்றும் மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் உடல்நலம் கருதி மாவட்ட பொறுப்பு செயலராக தோழர். V. வெங்கட்ராமன்செயல்படுவது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. நிறைவாக மாநில அளவில் தீரக்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் அதில் தீர்விற்க்கான வழிகளையும் விரிவாக விளக்கி மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார்.

             அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட  சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தோழர். L. உமாபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். P. B. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர்கள் தோழர். N. குப்புசாமி,  தோழர்.  பங்கஜவல்லி வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். 2017ல்   நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் வழங்கப்படாததால் அதனை வழங்கிடக்கோரி தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் அதில் ஓய்வூதியர்களின் பங்களிப்பு, இன்றைய அரசியல் நிலைமைகள், பட்ஜெட் – 2018 உள்ளிட்ட பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தார். கூட்ட முடிவில் தோழர். குடியரசு நன்றி கூறினார்.

       முன்னதாக 2017 நவம்பர் 9,10,11 தேதிகளில் மத்தியச் சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெற்ற தார்ணாவில் கோவை மாவட்ட 9 தோழர்கள் தங்கள் சொந்த செலவில் கலந்து கொண்டதை பாராட்டி அந்த தோழர்களுக்கு மாநிலச் சங்க நில்வாகிகளால் சால்வை அணிவிக்கப்பட்டது. 

 • வெற்றிகரமாக BSNLலில் நடைபெற்ற “சத்தியாகிரகம்”

  தார்மீக ஆதரவளித்து கலந்துகொண்ட AIBDPA தோழர்களுக்கும் மாவட்டச் செயலர்களுக்கும் வாழ்த்துக்கள் !

  கோரிக்கைகள்:-

  A) 1.1.2017 முதல் 3வது சம்பள உயர்வை 15 சத ஊதிய மாற்றத்தோடு வழங்கிடு !

  B) ஓய்வூதியர்களின்  ஓய்வூதிய மாற்றக் கோரிக்கையை நிறைவேற்று !!

  C) 2வது சம்பள உயர்வில் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !!!

  D) துணை டவர் கம்பேனி அமைக்கும்திட்டத்தை கைவிடு !!!!

  E) ஓய்வுபெறும் வயதை 60வதிலிருந்து 58டாக குறைக்காதே !!!  

            மேற்கண்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து BSNL தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 30.01.2018 முதல் 03.02.2018 வரை  நடத்திய 5 நாள்  “சத்தியாகிரக” போராட்டம் சிறப்பாக நாடு முழுவதும் நடைபெற்றது. நமது மத்திய மாநிலச் சங்கங்களின் வேண்டுகோளின்படி AIBDPA தோழர்கள் நாடு முழுவதும் சிறப்பாக கலந்து கொண்டனர்.

                  மேற்படி போராட்டத்தில் ஆதரவளித்து கலந்து கொண்ட AIBDPA தோழர்களுக்கும் விரிவான ஏற்பாடு செய்த அனைத்து மாவட்டச் செயலர்களையும் தமிழ் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டி வாழ்த்துகிறது. 

 • ஆம்பூர் கிளை (வேலூர் மாவட்டம்) உதயம்

  மாநிலச் செயலர் கலந்துகொண்டு புதிய கிளையையும் நிர்வாகிகளையும் வாழ்த்தி துவக்கி வைத்தார்.

             கடந்த 01.02.2018 அன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் புதிய AIBDPA கிளைச் சங்கம் உற்சாகமாக துவக்கப்பட்டது. கிளை துவக்க நிகழ்ச்சியில் முன்னதாக கொடியேற்றம் நடைபெற்றது. தேசியக் கொடியை மூத்த தோழர். கிருஷ்ணனும், AIBDPA சங்கக் கொடியை மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும், BSNLEU சங்கக் கொடியை ஆம்பூர் கிளைச்செயலரும் ஏற்றி வைத்தனர்.

          கிளை துவக்க நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமை ஏற்றார். தோழர். D. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் துவக்க உரை ஆற்றினார்.

           ஆம்பூர் புதிய AIBDPA கிளைச் சங்கத்தை துவக்கி வைத்தும், புதிய கிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்தும் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர். C. ஞானசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

        ஆம்பூர் புதிய AIBDPA கிளைச் சங்க நிர்வாகிகளாக தோழர். P. ராமு, SI, RTD கிளைத்தலைவர், தோழர். D. ராஜேந்திரன், STS RTD, கிளைச்செயலர், தோழர். வசந்தகுமார், STS RTD, கிளை பொருளாளர் என ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

         வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதி தோழர்கள் உட்பட பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்ட கிளைக்கூட்டத்தில் நிறைவாக தோழர். சந்திரகாந்தா நன்றி கூறினார். சிறப்பான ஏற்பாடுகளை செய்த வேலூர் மாவட்டச் சங்கத்தையும் புதிய கிளை தோழர்களையும் அதன் நிர்வாகிகளையும் தமிழ் மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி  பாராட்டி வாழ்த்துகிறது .