• நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  உற்சாகமாய் நடைபெற்ற  நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

              நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 12.02.2018 அன்று காலை 11மணி அளவில் நாகர்கோவில் நகர YMCA ஹாலில் வைத்து மாவட்ட உதவித் தலைவர் தோழர். V. சங்கரலிங்கம் தலைமையில் உற்சாகமாய் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். மீனாட்சி சுந்தரம் அஞ்சலி உரையினை நிகழ்த்தியதோடு வந்திருந்த தோழர்களை வரவேற்று வரவேற்புரையும்  நிகழ்த்தினார். மேலும் மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.  

   

       அகில  இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தை துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார். தனது துவக்க உரையில் இன்றைய அரசியல் சூழல், பென்ஷனர் பிரச்சனைகள், மக்களின் பிரச்சனைகள் என விரிவான உரையாற்றினார். நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் விரிவான சிறப்புரை ஆற்றினார். தனது சிறப்புரையில் மாவட்ட அளவில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள், AIBDPA கடந்து வந்த போராட்டப்பாதை, அதனால் ஓய்வூதியர்களுக்கு கிடைத்திட்ட பொருளாதார பலன்கள், சந்தித்த இடையூறுகள், தொடரும் போராட்டங்கள், பட்ஜெட் 2018 – இன்றைய அரசியல் சூழல் மாற்றம் அடையாத வருமான உச்சவரம்பு, மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் என விரிவாக பேசினார். கூட்ட முடிவில் மாவட்ட மாவட்டப்பொருளாளர் தோழர். A. அரிஹரன் மாவட்ட வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதோடு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 • தோழர். இந்திரா பணி நிறைவு பாராட்டுவிழா

  தோழர்.V.P. இந்திரா பணி நிறைவு பாராட்டுவிழா.

   

   

         

          மத்திய அரசின் தபால்தந்தி துறையில் பணியை துவங்கி  DOT – BSNL நிறுவனத்தில் 38 ஆண்டுகள் சேவை முடித்து 31.01.2018ல் பணி நிறைவு செய்த தோழர். V. P. இந்திராவுக்கு நாகர்கோவில் Y.R. மஹாலில் நேற்று 12.02.2018ல் பணி நிறைவு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரசு பணி, சமூகபணி, சமுதாயபணி, பெண்கள் முன்றேற்றம், தொழிலாளர் நலன், சங்கப் பணி என அனைத்திலும் பல பரிணாமங்களில் பணி செய்தாலும் குடும்ப பணியையும் சிறப்புடன் செய்த தோழர். V. P. இந்திராவின்  பணி ஓய்வுகாலம் சிறக்க  AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.  சமூக மற்றும் பெண்கள் முன்றேற்ற பணியில் கூடுதல் கவனம் செலுத்தி மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

     பணி நிறைவு பாராட்டு விழாவில் AIBDPA தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அனைத்திந்திய அமைப்பு செயலர் தோழர்.  K. காளிபிரசாத், மாநில உதவிச் செயலர் தோழர். பங்கஜவல்லி, மாவட்டச் செயலர்கள் தோழர். மீனாட்சி சுந்தரம் (நாகர்கோவில்), தோழர். P. ராமர் (தூத்துக்குடி), தோழர். D. கோபாலன் (நெல்லை) மற்றும் நாகர்கோவில், நெல்லை ஓய்வூதியர் சங்கத் தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

 • தோழர். முகமது அமீன் CITU முன்னாள் பொதுச் செயலர் மறைவு

  தோழர்.முகமதுஅமீனுக்கு செவ்வணக்கம் !

           சிஐடியூ-வின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர். முகமதுஅமீன் (வயது 89)  காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

         2007 முதல் 2010 வரை சிஐடியூ-வின் அகில இந்திய பொதுச்செயலாளர்.
  1969 முதல் 2004 வரை (1988முதல் 1994 வரை பாராளுமன்ற மேலவை உறுப்பினர்) மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர். பலகாலம் வங்காள மாநில அமைச்சர்.

           1942-ல் தனது 14 வயதில் சணல் தொழிலாளி.18-வயதில்–1946-ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தேசப்பிரிவினையின் சோகம் சுமந்தவர். பிரிவினையை ஒட்டி 1950களின் துவக்கத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கு கட்சி இவரை செல்ல கட்டளையிட்டது. அங்கேயும் கலகக்குரல் எழுப்பினர். அங்கு சிறைச்சாலையில் 26 மாதங்கள். பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
  முறையான கல்வி கிடையாது. இரவு பள்ளிகளில் இங்கிலீஷ் கற்றார். சணல், பீடி, ஜவுளி, இன்ஜினியரிங் தொழிலாளர்களை திரட்டினார்.
  சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளிலும் அடக்கம், ஆரவாரம் இல்லாமல் வர்க்க பணி செய்தவர். BSNLEU சங்கத்துடன் நீண்டகாலம் பரிச்சயம் உண்டு.

            உருது மொழியில் நல்ல புலமை மிக்கவர். சிஜடியூ கூட்டங்களில் புரட்சிகரமான உருது கவிதைகளை எடுத்து விடுவார். கம்யூனிஸ்ட் எளிமையின் அடையாளம் தோழர். அமீன். தோழருக்கு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் செய்வதோடு அவர்தம் பிரிவால் துயருரும் குடும்பத்தினர்களுக்கும் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் !