• தற்கொலையல்ல…. போராட்டமே தீர்வு…. வென்றனர் விவசாயிகள் !

  எழுச்சியுடன் நடைபெற்ற மகாராஷ்டிர விவசாயிகள் பேரணி வெற்றியில் நிறைவடைந்தது.

           மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முதல் மும்பாய் வரை 2018 மார்ச் 06 முதல் மார்ச் 12 வரை 200 கிலோமீட்டர் தூர எழுச்சி மிக்க விவசாயிகளின் பேரணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

                   நவீன தாராளமயக் கொள்கையால் வாழ்வாதாரத்தை இழந்த இந்திய விவசாயிகளில் இதுவரை 4லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதில் மகராஷ்டிர விவசாயிகள் 76 ஆயிரம் பேர். ஒவ்வொரு மரணத்திற்கு பின்னும் ஒரு விவசாயக் குடும்பம் அழிந்துள்ளது. ராஜஸ்தானைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் நடைபெற்ற இன்றைய விவசாயிகள் பேரணி சரித்திரம் படைத்துள்ளது. மோடி அரசினாலும் பிஜேபி மாநில அரசுகளாலும் கடும் பாதிப்பிற்கு உள்ளான விவசாயிகளே வீதியில் வந்து போராடுகின்றனர். விவசாயிகளின் கோபத்தைக் கண்ட அகில இந்திய விவசாயிகள் சங்கமும் சிபிஎம் கட்சியும் வடிவம் கொடுத்தன. வழிச்செலவுக்கு கூட காசு இல்லாமல் புறப்பட்ட விவசாயிகளுக்கு  வழிநெடுகிலும் மக்கள் ஆதரவு பெருகியது. நெடும் பயணத்திலும் தலித், முஸ்லிம், சீக்கிய அமைப்பினர்களும் விவசாயிகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கினர். மேலும் குருத்வாராக்களிலும், மசூதிகளிலும் இருந்தும் உணவு வழங்கப்பட்டது.

       ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டக்களத்தில் இணைந்தனர். சட்டமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகளுடன் தலித் அமைப்புகளும் கரம் கோர்த்தனர். பொருளாதார நகரமான மும்பாய் “மகத்தான மக்கள் திரளுக்கு” வரலாற்றுச் சாட்சியமாக மாறியது. போராட்டக்காரர்களை வாழ்த்தி CPM கட்சியின் பொதுச்செயலர் தோழர். சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

            போராட்ட எழுச்சியைக்கண்ட மகாராஷ்டிர அரசு பணிந்தது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகள் சங்க  அகில இந்தியத் தலைவர் அசோக் தாவ்லே தலைமையிலான பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் 9 அம்ச கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு எழுத்துபூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. 

     தற்கொலையல்ல…. போராட்டமே தீர்வு…என்று வென்று காட்டிய மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுவதோடு கலந்து கொண்ட அனைவருக்கும் செவ்வணக்கம் கூறுகிறது.