• ஏலம் போகும் ஏர் இந்தியா

    தனியார்மயமாகும் விமான சேவை – பாதுகாப்பற்ற நிலையில்  பணி செய்த ஊழியர்கள் ?

           GST மூலம் வருவாய்உயர்வு ! பெட்ரோல் டீசல் மூலம் வருவாய் உயர்வு !! பசி அடங்காத நிலையில் (2016-2017) கடந்த ஆண்டு பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூபாய் 46,250 கோடி வருவாய். இந்த ஆண்டு (2017-2018) 1லட்சம் கோடி. இன்னும் ஆவல் தீராத மத்திய பிஜேபி அரசின் அடுத்த பொதுத்துறை  விற்பனை இலக்கு “ஏர் இந்தியா”.

                தனியார்களின் கட்டுப்பாட்டில் இருந்த விமான சேவைகள் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் என தேசிய மயமாக்கப்பட்டு 65 ஆண்டுகள் கழிந்த பின்னர் தற்போது அவை மீண்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. அதன் தனியார் மயமாக்கலுக்கான அனைத்து பணிகளையும் அரசு இறுதி செய்துவிட்டது. அதன்படி ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா-SATS ஆகிய நிறுவனங்களின் 76 சதமான பங்குகள் தகுதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும். வாங்குபவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்தக் கடன் 50,000 கோடி ரூபாய்களில் 24,576 கோடி ரூபாய்களையும், தற்போதுள்ள 8,816 கோடி ரூபாய்கள் கடனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏர் இந்தியா நிறுவனத்தை அடையப்போகும் முதலாளி யார் என்பது செப்டம்பர் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு விடும். தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் 11,214 நிரந்தர ஊழியர்களும், 7,486 காசுவல் ஊழியர்களும், 2,913 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளனர். ஆபத்தில் உள்ள இவர்கள் கதி என்ன என்பதே இப்போதுள்ள கேள்வி ?