தோழர். முகமது அமீன் CITU முன்னாள் பொதுச் செயலர் மறைவு

தோழர்.முகமதுஅமீனுக்கு செவ்வணக்கம் !

         சிஐடியூ-வின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர். முகமதுஅமீன் (வயது 89)  காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

       2007 முதல் 2010 வரை சிஐடியூ-வின் அகில இந்திய பொதுச்செயலாளர்.
1969 முதல் 2004 வரை (1988முதல் 1994 வரை பாராளுமன்ற மேலவை உறுப்பினர்) மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர். பலகாலம் வங்காள மாநில அமைச்சர்.

         1942-ல் தனது 14 வயதில் சணல் தொழிலாளி.18-வயதில்–1946-ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். தேசப்பிரிவினையின் சோகம் சுமந்தவர். பிரிவினையை ஒட்டி 1950களின் துவக்கத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கு கட்சி இவரை செல்ல கட்டளையிட்டது. அங்கேயும் கலகக்குரல் எழுப்பினர். அங்கு சிறைச்சாலையில் 26 மாதங்கள். பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
முறையான கல்வி கிடையாது. இரவு பள்ளிகளில் இங்கிலீஷ் கற்றார். சணல், பீடி, ஜவுளி, இன்ஜினியரிங் தொழிலாளர்களை திரட்டினார்.
சிபிஎம் மத்திய கமிட்டி உறுப்பினர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளிலும் அடக்கம், ஆரவாரம் இல்லாமல் வர்க்க பணி செய்தவர். BSNLEU சங்கத்துடன் நீண்டகாலம் பரிச்சயம் உண்டு.

          உருது மொழியில் நல்ல புலமை மிக்கவர். சிஜடியூ கூட்டங்களில் புரட்சிகரமான உருது கவிதைகளை எடுத்து விடுவார். கம்யூனிஸ்ட் எளிமையின் அடையாளம் தோழர். அமீன். தோழருக்கு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் செய்வதோடு அவர்தம் பிரிவால் துயருரும் குடும்பத்தினர்களுக்கும் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் !

Leave a Reply