அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்
மனிதருள் யாரும் மார்க்கண்டேயன் இல்லை...
செடிகள் மரமான பின், வேர்களை விலக்குவதில்லை...
மூத்த விலங்குகளுக்காக, தனி முட்காடு எதுவுமில்லை...
பழுத்த பறவைகளுக்கான, தனிக்கூடு பார்த்ததில்லை... ஆனால்
இங்கோ,
மூப்பு எய்திய மனிதரை சேர்த்து வாழ விருப்பமில்லை...
வானளாவ வள்ளுவம் புகழ்வோம், "பெரியாரைத் துணைக் கோடல்",
எனும் அதிகாரத்தை மறந்து நிற்போம்...
ஆத்திச் சூடியை போற்றிப் புகழ்வோம்,
"பெரியாரைத் துணை கொள்",
என்பதை மனம் ஏனோ மதிப்பதில்லை...
கதவுக்கு வெளியினிலே, கழற்றி விடப்படும் காலணிகளாய் முதியவர்கள்...
உதவிக்கு யாருமில்லா ஊமைப் பிண்டமாக உதறப்படும் மூத்தோர்கள்...
பெற்றோரின் கொடை தானே,
உங்களைப் பின் தொடரும் பட்டமெல்லாம்?...
அவர்கள் சேகரித்த துளிகள்தானே, பிள்ளைகள் செல்வத்தில் புரள்வதெல்லாம்...
அன்னை தந்த பாலுக்கும்,
அப்பன் சிந்திய வியர்வைக்கும், நன்றிக் கடன் தீர்க்க நமக்கு நானூறு பிறவிகள் வேண்டும்...
வங்கியில் வாங்கிய கடனை,
வட்டியோடு செலுத்துகின்றோம்...
ஆனால்,
வளர்த்த கடனைத் தீர்க்க வக்கற்று நிற்கின்றோம்....
ஓட்டைக் காலணாவுக்கும்,
ஓல்டான ஒயினுக்கும்,
உயர்தர மதிப்பென்று உலகே ஒப்புக்கொள்ளும்...
ஆனால்,
பாட்டன் பாட்டியரை பயனில்லாச் சரக்கு என்று,
மூட்டை முடிச்சுகளுடன் மூலையிலே ஒதுக்கித்தள்ளும்...
முட்டுச் சந்தெல்லாம் முதியோர் இல்லம் திறந்துவிட்டு,
வளர்த்த நன்றி மறந்து,
வயதானவரை விரட்டித்தள்ளும்...
உழைத்து ஓய்ந்தவர்களை,
நம்மை உருவாக்கி உயர்த்தியவர்களை,
நோயின் பிடிக்குள் வீழ்ந்து,
நொடிந்து நூலானவர்களை,
கரம் நீட்டிக் காத்தல்
கண்ணிய மனிதக் கடமையன்றோ...
முதியோரைப் போற்றா தேசம்,
முன்னேற்றம் கண்டும் என்ன பயன்?...
மூத்தோர் உதவித் தொகையும்,
பணி முடித்த பின் ஓய்வூதியமும்,
கருணைத் தொகைகளல்ல,
முதியோர் உரிமைத் தொகையென உணர்வோம்...
தன்மான வாழ்வுக்கும்,
தற்சார்புத் தேவைக்கும்,
தகுந்த ஓய்வூதியம் தருதல் முறையன்றோ!...
இதை விரயமென்றும்,
வீண் செலவென்றும்,
கருதுதல் சமூக அநீதியன்றோ?!...
முதுமை சாபமல்ல,
முடியாமை பாவமல்ல...
ஏழ்மையும், நோயும்
எவரின் குற்றமுமல்ல...
பருவத்தின் பாதையிலே,
மூப்பும் ஓர் நிலையே...
பழுதாவதும் பலமிழப்பதும்,
உயிரினங்கள் அனைத்திற்கும் ஒருங்கான இயற்கையே!...
பழைய தங்கம் என்றால்,
பவுனுக்கு பத்து கிராமா?
வயதாகிப் போனதால், வைரம் கண்ணாடியாகுமோ?
எண்ணிலாப் பட்டங்களை,
தம்முடன் இணைத்தாலும்,
அரிச்சுவடிப் பாடத்தினை அவமதிப்பு செய்வோமா?...
அறிவுக்கும் ஞானத்துக்கும் வயதுக் கணக்கீடேது?
உழைத்து உருவாக்கித் தந்த,
முதுமைக்கு ஈடிணையேது?...
முதுமையை போற்றி மதிப்போம்...
முதியோரைத் தழுவி அணைப்போம்...
மூத்தோர் சொல் முத்தெனக் காப்போம்...
இளமைத் துடிப்பாற்றிற்கு,
இருபக்கக் கரைகளாக முதியோரைத் துணைகொள்வோம் ...
இளமை, கணிப்பொறியாய் விந்தைகள் புரிந்தாலும்,
காக்கும் கடவுச் சொல்லாய்,
மூத்தோரை ஏற்றிடுவோம்...
இளமையும் முதுமையும் இணைந்து பயணித்தால்,
வலிமையும், வனப்புமாக
உலகம் உயர்ந்து நிற்கும்...
நமக்கென ஒரு முகவரியைத் தந்தவர்களை, நம்மோடு இருத்தும் நன்றியின்றி, முதியோர் இல்லத்து முகவரியைத் தேடல் தகுமோ?...
ஏழ்மை கொடிது...
முதுமையில் ஏழ்மை அதனினும் கொடிது...
நோய்வாய்படுதல் கொடிதினும் கொடிது...
பாரமாய் எண்ணும் பாராமுக உறவுகள்,
வார்த்தையில் அடங்கா
வலிதரும் கொடிது...
நேற்று குழந்தை...
இன்று இளைஞன்...
நாளை???...
நாமும் முதியவரே...
இன்றைய நம் செயல்கள்,
நாளை நமக்கே பூமராங்காய்த் திரும்பி வரும்...
முதியோரைக் காக்கும் கடமை,
ஒவ்வொரு மனிதனுக்கும்,
ஒட்டுமொத்த அரசுக்கும்,
தலையான கடனென்று
தயக்கமின்றி ஏற்றிடுவோம்!!
முதியோர் நலம் பேணுவோம்!...
மூத்தோர் உரைக்கு செவி மடுப்போம்!!...
நாம் ஈன்றவர்கள் மட்டும்,
நம் குழந்தைகள் அல்ல,
நம்மை ஈன்றவர்களும் நமக்குக் குழந்தைகளே!!...
தோழமையுடன்,
ப.சரவணன், AO, BSNL, (Retired)
மாவட்ட உதவி செயலர்
AIBDPA, வேலூர் மாவட்டம்.
Fwd
R. ராஜசேகர்
மாநில செயலர்
AIBDPA TN
30.9.23
0 Comments