1968 செப். 19 போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம் !!
September 19, 2023
செவ்வணக்கம்💪 செவ்வணக்கம்💪
1968 செப். 19 போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம் !!
தோழர்களே,
இன்றைய நாள்,
இதே 19 செப்டம்பர், 1968..
வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்ற நாள்.
மத்திய அரசு ஊழியர்கள்
குறைந்த பட்ச தேவைக்கு ஏற்ற சம்பளம்,
பஞ்சப்படி உயர்வு – விலைவாசி புள்ளி உயர்வின் படி
என்ற கோரிக்கையுடன் நடத்தப்பட்ட ஒருநாள் வேலை நிறுத்தத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் நாடு முழுவதும் பங்கேற்றனர். அரசு இயந்திரம் நிலை குலைந்தது.
இந்திரா காந்தி அரசு, பேச்சு வார்த்தையை மறுத்து, பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது.
80 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் கைதாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்மிஸ் ஆனார்கள்.
17 தோழர்கள் காவல்துறை /ரிசர்வ் போலிஸ் படையினரால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டு, வீர மரணம் அடைந்தனர்.
பிறகு, தண்டனைகளை, அவை வேறு பட்டாலும், அவற்றை நீக்கி, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குக் கொண்டுவர, பல காலங்கள், பல போராட்டங்கள் தேவைப்பட்டன. இவை நமது தொழிற்சங்க வரலாற்றின் பெருமை மிகு தருணங்கள்.
தற்போது 55 வருடங்கள் 19.09.23 கடந்து போனது. ஆனால் இன்னும் புதிய, புதிய ஒடுக்கு முறைகள், மத்திய, பொதுத்துறை தொழிலாளர்கள், ஊழியர்கள் வர்க்கத்திற்கு எதிராக தொடர்கின்றன.
போராடிப் பெற்ற பென்சன், EPF, வேலைப் பாதுகாப்பு போன்றவை ஆபத்தில் உள்ளன. 9 லட்சம் காலியிடங்கள் மத்திய அரசு, இரயில்வே துறைகளில் நிரப்பப்படாமல் உள்ளன. இவை மன அழுத்தத்தையும், விபத்துகளையும் தருவிக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள், மிகக் குறைந்த விலையில், அவற்றின் மொத்த மதிப்பில் பாதிக்கும் குறைவான மதிப்பில் தனியார்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.
நாட்டின் அரசியல் அமைப்பையும், மதச் சார்பற்ற, கூட்டாட்சி – தத்துவத்தையும் குலைக்கும் வகையில் தந்திரங்கள் ரகசியமாக முன்னெடுக்கப் படுகின்றன. மதச்சார்பான மோதல்கள் ஆளுகின்ற அரசின் சார்பிலேயே உருவாக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலை 1975-77 அவசரக் கால நிலையை விட, மோசமாகவே உள்ளது.
ஒன்று மட்டும் உண்மை, ஒற்றுமையான கூட்டு இயக்கங்கள், இந்த மக்களுக்கு விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1975 – 77 ன் *அவசர நிலை கருப்பு தினங்களைப் போல*, தொழிலாளர், விவசாயிகளால் – கூட்டுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. *அரசியல் களம், எதிர்க்கட்சிகளின் ஒன்று பட்ட அணி சேர்ப்பின் காரணமாக, அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது*.
இப்படிப்பட்ட முக்கியமான தருணத்தில், நாம் 1968 செப். போராட்ட தினத்தை இன்று (19.09.23) நினைவு கூர்கிறோம். இது கண்டிப்பாக நம்முடைய வருங்கால போராட்டங்களுக்கும், தொழிலாளர்களின் ஒன்றிணைந்த இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
0 Comments