Latest

10/recent/ticker-posts

AIBDPA பூனே மத்திய செயற்குழு அறை கூவல் !!

அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம் - தமிழ் மாநிலம்

AIBDPA பூனே மத்திய செயற்குழு அறை கூவல்

2023 டிசம்பர் 1 முதல் 10 வரை அனைத்து மட்டங்களிலும் தீவிரமான பிரச்சாரம் !!

தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் !!

பென்ஷன் ரிவிஷன் - மத்திய தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் அதன் விளைவுகளும் ??

         பென்ஷன் ரிவிஷன் பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்தே AIBDPA ஒரு தீர்மானமான முடிவில் இருந்து வருகிறது. பென்ஷன் ரிவிஷன் மூன்றாவது PRC அடிப்படையில், சம்பள உயர்வில் இருந்து பிரிக்கப்பட்டு, 15% உயர்வுடன் 1.01.2017 முதல் அமலாக்கப்பட வேண்டும் என்பதே அது.
                     இன்றும் கூட நம்முடைய உறுதியான கருத்து யாதெனில், அதுவே இயல்பானதும், மற்றும் நிறைவேறக்கூடியதுமாகும்.
                முதலில் சம்பள மாற்றத்திற்குப் பிறகே பென்சன் மாற்றம் என்ற கருத்தில் உறுதியாக இருந்த நிர்வாகம், நம் AIBDPA மற்றும் கூட்டமைப்புகள் / AUAB பேச்சு வார்த்தைகள், போராட்டங்கள், பேரணிகளுக்குப் பிறகு தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டது.

வரலாற்றுப் பின்புலம் :

      பொதுத்துறை நிறுவனமாக 01.10.2000ல் BSNL உருவாக்கப்பட்ட போது, அரசு நிர்வாகத்தின் தரப்பில் நமக்கு அளிக்கப்பட்ட உறுதி என்னவெனில், சிறந்த வாய்ப்புகளுடன் கூடிய முன்னேற்றம், மத்திய நிதி தொகுப்பில் இருந்து ஓய்வூதியம் இரண்டும் ஆகும். அதற்கேற்றபடி, CCS (பென்ஷன்) விதி 1972ல் 37 A என்ற ஷரத்து புதியதாக இணைக்கப்பட்டது. இதன்படி, BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் IDA சம்பள விகிதத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள். IDA விகிதம் என்பது, நடைமுறையில் இருந்த CDA விகிதத்தை விட அதிகமாகும். மேலும் பஞ்சப்படி 6 மாதங்களுக்கு பதிலாக, IDAவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை என்று மாறியது. BSNLலில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் பென்சன், IDA தவிர மற்ற அனைத்தும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாற்றம் எதுவும் இல்லாமல் தொடர முடிந்தது. இதன் காரணமாக BSNL பென்ஷனர்கள் 01.01.2007ல் தரப்பட்ட பென்ஷன் மாற்றத்தையும் 2 வது PRC படி, ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதே 30% உயர்வுடன் பெற முடிந்தது. அந்த சமயத்தில் யாரும், எந்த அமைப்பும் 6வது CPC படி என்ற கோரிக்கையை எழுப்பவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

             ஆனால் 01.01.2017 முதல் வரவேண்டிய பென்ஷன் மாற்றம் 7வது CPCபடி இருக்க வேண்டும் என்று ஒரு ஓய்வூதியர் சங்கம், கோரிக்கையை வைத்தது. அதற்கு, இனி மேல் வரும் காலங்களில் PRC என்பதே இருக்காது என்றும், CPC படி இருப்பது தான் நிரந்தரம் என்றும் வியாக்கியானம் செய்தது. அதற்கேற்றபடி, 7வது ஊதிய குழுவிடம் மகஜர் கொடுத்ததாகவும், DOT, DOP&PW நிர்வாகங்களிடம் விவாதிக்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் அதன் நிர்வாகிகள் கூறினார்கள். எதுவும் அதைப் போன்று நடக்கவில்லை என்பதே நிஜம்.

              பிறகு, அவர்கள், அந்தச் சங்கத்தின் மூலம் PM Cares Fund என்ற பெயரில் நன்கொடைகள் பெற்று, அதை கர்நாடக மாநிலத்திலுள்ள மத்திய அமைச்சர் ஒருவரின் மூலம் அரசுக்கு சேர்த்து, சரிகட்டவும் முயன்றனர். இந்த கர்நாடக மந்திரியைப் பயன் படுத்தி, அப்போதைய டெலிகாம் அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களைச் சந்தித்தனர். அவர் இவர்களின் கோரிக்கையை அக்கணமே நிராகரித்தார். இந்த எதிர்பாராத தாக்குதலை தாங்க முடியாமல், அமைச்சரையும், DOT அதிகாரிகளையும் வசை பாட ஆரம்பித்தனர். நீதி மன்றம் செல்வதைத் தவிர பென்சன் மாற்றத்திற்கு இனி வழி வகை இல்லை என்ற முடிவிற்கு வந்தனர். கருத்துகளால் ஒன்றிணைந்த குழு அமைந்தாலும், கோரிக்கையில் ஒற்றுமையின்மை நிலவியதால், தனித்தனியாக டெல்லி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (PBCAT) வழக்கு தொடர்ந்தனர்.

         நம் AIBDPA சங்கத்தையும் இது விஷயமாக அணுகினர். 2019 ஹௌஹாத்தியில் கூடிய நமது மத்திய செயற்குழு இதை ஆழமாகப் பரிசீலித்தது. நிறைந்த விவாதங்களுக்குப் பின்னர், கீழ்கண்ட காரணங்களுக்காக, நீதிமன்றம் செல்வது உசிதம் அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1. இது வரை அரசோ, நிர்வாகமோ பென்ஷன் மாற்றம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

2. பென்சன் மாற்றத்தை நீதிமன்றத்தின் பொறுப்பில் விடுவது ஏற்றத்தக்கது அல்ல; அது ஒரு விதமான முடிவுறாத்தன்மையை உருவாக்கும்.

3. 2007 பென்சன் மாற்றமே, முதலில் அரசால் நிராகரிக்கப்பட்டது. 37A விதியின் படி, பென்சன் ரிவிஷனுக்கு இடமில்லை என்று அரசு கூறியது. பிறகு நமது AIBDPA, AUAB போன்ற கூட்டமைப்புகளின் இடைவிடாத போராட்டங்களாலும், தொழிற் சங்க இயக்கங்கள் காரணமாகவும் தான் சாத்தியமானது.

4. நீதிமன்றம் மூலம் தீர்வு என்பது இருபக்கம் கூர்முனை கொண்ட கத்தி போன்றது. நீதிக்குக் காத்திருக்கும் காலங்கள் அதிகமாவதுடன், மாறுபட்ட முடிவுகளையும் எதிர் கொள்ள நேரிடலாம்.

5. நிதி சம்பந்தப்பட்ட, குறைந்த அளவே சலுகைகளை உள்ளடக்கிய, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் கூட, அமல்படுத்தப் படாமல் இருக்கும் நிலைமைகளையும் நாம் அறிவோம்.

           குவஹாத்தி CECபடி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமருக்கு கையெழுத்து மனு கொடுத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தல், இதன்படி 119 உறுப்பினர்கள் சந்திப்பு நடந்தது. சபாநாயகர் மற்றும் மத்திய அமைச்சர்களும் இதில் அடங்குவர். மாவட்ட, மாநில தலைநகரங்களில், CCA அலுவலகங்களில் தர்ணா முதலிய இயக்கங்கள் நடைபெற்றன. கோவிட் காரணமாக முடிவெடுத்தபடி, 12.03.2020 நடை பெற வேண்டிய *டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணி* மட்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

               AIBDPA மேற்கொண்ட இடைவிடாத தொடர்ந்த போராட்டங்கள், 24.08.2022ல் நடைபெற்ற மாபெரும் சஞ்சார் பவன் பேரணி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது.

           30.08.2022 அன்று, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மெடிக்கல் பிரச்சினைகள் தீர, உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

    DOT நிர்வாகம், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களை, 17.10.2022ல் பென்சன் மாற்றம் சம்பந்தமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

             அதே சமயம், நாம் மேலே சொன்ன அந்தச் சங்கம், இனி பேச்சு வார்த்தையே இல்லை நீதி மன்றமே துணை என்று முழங்கிய சங்கம், மத்திய அமைச்சருக்கும், DOT நிர்வாகத்திற்கும் மீண்டும் கடிதப் பரிமாற்றங்களை ஆரம்பித்தது. புதிய அமைச்சர் நல்லவர், வல்லவர் என்றும், ஆணவம் மிக்க DOT அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனர் என்றும் கூறத் தொடங்கியது. அவர்கள் ஏற்கெனவே கூறியபடி CPCபடி பென்சன் ரிவிஷன் மந்திரி மற்றும் DOT யால் ஏற்கப்பட்டது என்றும், DOP&PW நிர்வாகத்திற்கு அனுமதி வேண்டி அனுப்பப்பட்டுள்ளது.
இனி யாரும் இதனை கெடுக்க முடியாது என்றும் பிரசாரம் செய்தனர். ஆனால் மறுநாளே, முகத்திரை கிழிந்து, பழையபடி DOT நிர்வாகத்தை குறை சொல்ல ஆரம்பித்தனர்.

அக்டோபர் 17, 2022 முக்கியமான கூட்டம் :

        அநேகமாக அனைத்து BSNL, MTNL ஓய்வூதியர் சங்கங்கள் பங்கேற்ற சந்திப்பிற்கு, திரு. மகேஷ் சுக்லா, மெம்பர் (Services) தலைமை வகித்தார். அறிவிக்கப்பட்ட அஜெண்டா, 3வது PRCயின்படி பென்சன் ரிவிஷன் என்று கோடிட்டுக் காட்டியது. நிர்வாகத் தரப்பில் கீழ்க் கண்ட தகவல்கள் சொல்லப்பட்டன.

1. சம்பள மாற்றம், பென்சன் ரிவிஷன் இவற்றை D-link செய்ய அரசு முடிவு செய்ய உள்ளது.

2. பென்சன் மாற்றம் 3 வது PRC மூலம் மட்டுமே சாத்தியப்படும்.

3. 7th CPC படி பென்ஷன் மாற்றம் என்பது சட்டபூர்வமாக சாத்தியப்படாதது மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். இதற்கு ஆதாரமாக வேறு சில நீதி மன்ற தீர்ப்புகளும் எடுத்துக் காட்டப்பட்டது.

4. 2017 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அனாமலி ஏற்படாத வகையில், 1.1.2017 முதல் 3வது PRC , அடிப்படையில் பென்சன் மாற்றம் கணக்கிடப்பட்டு (notional fixation), புதிய விகிதத்தில் அவர்கள் ஓய்வு பெற்ற காலம் வரை ஆண்டு உயர்வு சேர்க்கப்பட்டு, அவர்களின் பென்சன் கணக்கிடப்படும்.

           ஆனாலும், நிர்வாகம் தெரிவித்த 0% ஃபிக்ஷேசன் எல்லா சங்கங்களாலும் ஒருமித்த குரலில் நிராகரிக்கப்பட்டது.

AIBDPA சங்கம் பின் வரும் காரணங்களினால், 3PRCயின்படி, 15% பலன்களோடு மாற்றத்தை வலியுறுத்தினோம் :

1. ஆரம்பத்தில் இருந்த 60 : 40 விகிதம் மத்திய அமைச்சரவையில் நீக்கப்பட்ட பிறகு, முழு பென்சன் தருவது என்பது மத்திய அரசின் கடமையாகி விட்டது என்பதுதான் உண்மை.

2. பென்சனுக்காக, BSNL MTNL நிர்வாகங்கள் ஏற்கெனவே, ஊழியர்களின் உயர் சம்பள விகிதத்தில் நிதித் தொகுப்பிற்கு பணம் அளித்தாகி விட்டது.

3. 01.01.2007ல் 2 வது PRCயின் படிதான் 30% பென்சன் ரிவிஷன் வழங்கப்பட்டது.

4. மத்திய அரசு ஓய்வூதியர்கள், ஏற்கெனவே 7 வது CPC படி 01.01.2016 முதல் பென்சன் மாற்றத்தைப் பெற்று விட்டனர்.

       இறுதியில், மெம்பர் (S) தங்கள் உயர் அதிகாரிகளுடன் இதைப் பற்றி விவாதித்து தெரிவிப்பதாகக் கூறினார். அவ்வமையம் திரு. D. கோபாலகிருஷ்ணன், பிரகலாத் ராய், G.L.. ஜோகி ஆகியோர், தங்கள் கோரிக்கையான 7 வது CPC படி பென்சன் மாற்றம் என்பதை மறந்து, 0 % முதல் 15 % வரைக்கும் இடையில் பிட்மெண்ட் இருக்குமாறு ஆராய முடியுமா என்று கோரிக்கை விடுத்தனர். இது அவர்களின் PRC பற்றிய மனமாற்றத்தை தோற்றுவிக்கும்படி இருந்தது.

      ஆனால், அடுத்த நாள் திரு. D. கோபாலகிருஷ்ணன், பிரகலாத் ராய் இருவரும், ஏதோ ஒரு மன நெருக்கடியின் பேரில், மீண்டும் 7th CPCயின் படி என்று பழைய இசையை வாசித்தனர். இது பென்சன் மாற்றத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. இது அவர்களின் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியது. அவர்களிடம் இருந்த 5 சங்கங்கங்கள், SNPWA உட்பட, கூட்டமைப்பிலிருந்து வெளியேறின.

BSNL MTNL கூட்டமைப்பு, அதன் போராட்டங்கள் :

         BDPA (I), AICGPA HQ Pune இரு சங்கங்கள் நம் பார்வை சரியானது என்று ஏற்றுக் கொண்டதால், அவர்களையும் உள்ளடக்கி, BSNL, MTNLலை சேர்ந்த 8 ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவானது. டெலிகாம் அமைச்சர், DOT நிர்வாகம் இவற்றிற்கு, கூட்டமைப்பு சார்பில் தெளிவான, விரிவான பென்சன் மாற்றத்திற்கான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பென்சன் ரிவிஷன் வழங்குவதற்கான திட்டம் :

          கூட்டமைப்பின் சார்பில், இனி வரக்கூடிய BSNL MTNL ஓய்வூதியர்களையும் உள்ளடக்கிய, விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும், இது பிற்காலத்தில் வரக்கூடிய PRC க்கும் பொருந்துவதாக வடிவமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தோம்.
        இந்தக் குறிப்பிட்ட கோரிக்கையை, அமைச்சரவைக்கான கடிதத்தில் சேர்ப்பதற்கும் மெம்பர் (F), மெம்பர் (S) இருவரும் ஏற்றுக் கொண்டனர்.

           17.10.2022 கூட்டத்தில் உறுதியளித்தபடி, 5%, 10%, 15% பென்சன் மாற்றத்திற்கான நிதித் தேவைகள் CGCAவால் கணக்கிடப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாக 21.03.2023ல் கூட்டமைப்பு சார்ந்த தலைவர்கள் DOT நிர்வாகத்தைச் சந்தித்த போது தெரிவிக்கப்பட்டது. தங்கள் மட்டங்களில் விவாதங்கள் முடிந்து விட்டதாகவும், வரும் ஏப்ரல் மாத அமைச்சரவை சந்திப்பில் இதைப் பற்றி டெலிகாம் அமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறப்பட்டது. அமைச்சரை சந்தித்த G. L. ஜோகி அவர்களிடம், 10% உயர்வு ஏற்றுக் கொள்ளப் படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பின் வந்த மாதங்கள் சற்று மந்தமாகிப் போயின. DOT நிர்வாகத்தின் சலிப்பு மனநிலை வெளிவந்தது. ஆகையால் கூட்டமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டு நாட்கள் 2023 ஆகஸ்டு. 24, 25 தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் நழுவிய பென்சன் ரிவிஷன்  !?!

        பின்னொரு நாளில், ஒரு அதிகாரி, DOT அலுவலகத்தில் ஒரு தகவல் சொல்கிறார். அதாவது பென்ஷன் ரிவிஷன் பற்றிய முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி மத்திய தீர்ப்பாயத்தில் பென்ஷன் மாற்றம் சம்பந்தமான வழக்கின் விவாதம் காரணம் என்று சொல்லப்படுகிறது. இறுதியில் 20.09.2023 அன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கோரிக்கைகள் (OAs) அனுமதிக்கப்பட்டன. அதாவது ஒரு சரியான தீர்வை, பென்சன் மாற்றத்தில், இந்த வழக்கின் தீர்ப்பின் மூலமாக, தவற விட்டிருக்கிறோம்.

தீர்ப்பின் விளைவுகள் :

          சிலர் ஏகத்திற்கு சந்தோஷப்பட்டார்கள். ஏதோ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தது போலவும், மறுநாளே பென்சன் ரிவிஷன் ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் கொண்டாடினார்கள். மற்றும் சிலர் arrears எவ்வளவு வரும் என்று கணக்கிட ஆரம்பித்தார்கள். ஓய்வூதியர்களை நோக்கி, பெரிய நன்கொடை தேடிய படையெடுப்பு ஆரம்பித்தது. உண்மை என்னவெனில், செமி - ஜுடிசியல் என்று சொல்லப்படும், ஒரு தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறக்கடிக்கப்பட்டது. இதே போன்ற வழக்குகள் எர்ணாகுளம், பெங்களூரு, ஹைதராபாத் தீர்ப்பாயங்களால் மறுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி முதனிலை தீர்ப்பாயம் மட்டும் அனுமதித்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

          கோர்ட்டுக்குச் சென்றவர்கள் பின்னர் DOTக்கு சென்றார்கள். அதிகாரிகளைச் சந்தித்து விட்டு வந்த போது, சுருதி குறைந்திருந்தது. DOT நிர்வாகம் கண்டிப்பாக மேல் முறையீடு செய்யும் என்று தோன்றுகிறது என்றார்கள். இதை மெம்பர் (S), 8.11.23 அன்று AIBDPA பொதுச் செயலர் அவர்களிடம் ஆமோதித்தார். பிரகலாத் ராயும், நம் GSடம், அன்று மாலை சஞ்சார் பவனில் சந்தித்த போது இதை உறுதபடுத்தினார். ஆகையால் எவ்வளவு தாமதமாகும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அரசு நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, மேலும் தாமதப்படுத்தும்.

ஏன் AIBDPA, கோர்ட் தீர்ப்பை அமல் படுத்தச் சொல்லி அரசுக்கு கோரிக்கை விடக்கூடாது ?

       நம் தோழர்கள் சிலரே, இந்தக் கேள்வியை நம்மிடம் எழுப்புகின்றனர். பதில் மிகவும் எளிமையானது.

      தீர்ப்பில், மிக முக்கியமாக ஆபத்தான ஒரு அணுகுமுறையை நீதிமன்றம் சொல்லியுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.

     The competent authority is directed to forthwith revise the pension and family pension, strictly in accordance with the relevant rules and the entitlement governing pension to various set of employees of the Central Govt, MAINTAINING STRICT PARITY

      இதன் பொருள் என்னவெனில் மத்திய அரசு பென்சன் /குடும்ப பென்சன் வாங்குபவர்களுக்கு, இணையாக BSNL, MTNL ஓய்வூதியர்களுக்கும் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். BSNL, MTNL ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியர்களை விட அதிகமான பென்ஷன், அதிகமான DA என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இதற்குக் காரணம் IDA சம்பள விகிதம் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. இதே கருத்து மெம்பர் (S) அவர்களாலும் எழுப்பப்பட்டது என்று, கோர்ட் சென்ற சங்கங்கத்துடன் சென்ற தோழர் G.L.ஜோகியும் நம்மிடம் கூறினார்.

2017க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களின் நிலை :??

மற்றொரு முக்கியமான, கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், 2017 க்குப் பின் ஓய்வு பெற்றவர்கள் சந்திக்கும் பிரச்சினை. இப்படிப்பட்ட post 2017 பென்ஷன் பெறுபவர்களுக்கு எவ்வித பரிந்துரையோ, கோரிக்கையோ வைக்கப்படவில்லை. அதன் காரணமாக இவர்களுக்கு எந்த வித வழிகாட்டலும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் 2017 க்குப் பின் ஓய்வு பெற்றவர்கள், இந்த கோர்ட் படியேறிய சங்கங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

      AIBSNLPWA, 2017 ஓய்வூதியர்களும், முந்தைய ஓய்வூதியர்களைப் போலவே ஃபிட்மெண்ட் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் கூறியது. இது உண்மையாக அவர்களுக்கு நன்மை பயப்பது ஆகாது ; எனினும் DOT நிர்வாகம் 17 அக். 2022 கூட்டத்தில் பலனலிக்ககூடிய, வரவேற்கதக்க முன்வடிவை ஏற்றுக் கொண்டது.

      வழக்கின் தீர்ப்பு வந்தவுடன், திரு. D. கோபாலகிருஷ்ணன், DOT நிர்வாகத்தின் முடிவையே பிரதிபலித்தார். ஆனால் அவர்களின் சமீபத்திய 15 நவ. கடிதத்தில், தங்கள் பழைய நிலையே தொடர்வதாக, கூறியிருக்கிறார். இது அந்தச் சங்கம் 2017 க்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களைப் புறக்கணிப்பது என்பதைத் தவிர வேறில்லை. AIBDPA இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை, DOTயின், சம்பள விகித ஃபிட்மெண்ட்டை வரவேற்கிறோம்.

எனவே தோழர்களே,
      இந்த தீர்ப்பாயம் தந்த தீர்ப்பு ஒரு தடைக்கல்லாகி இருக்கிறதே தவிர, படிக்கல்லாகவில்லை. தீர்ப்பை மேன்மைப் படுத்துபவர்கள், உண்மைகளை மறைக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

AIBDPA வின் தொடரும் போராட்டப் பாதை :

        பூனாவில் கடந்த 2023 நவ. 19-20 தேதிகளில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு, மேற்கண்ட விஷயங்களை நன்கு ஆராய்ந்து சரியான முடிவுகளை தீர்மானித்துள்ளது. இதைப் போன்ற முட்டுக்கட்டைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
          எனவே வரும் 2023 டிச. 1 முதல் 10 வரை, நமது நிலையை, மேற்சொன்ன உண்மைகளை நம் உறுப்பினர்கள், மற்ற ஓய்வூதியர்கள் அனைவரிடமும் தீவிர பிரச்சாரம் கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதன் பிறகு மற்ற சங்கங்களுடன் கலந்து பேசி, *அடுத்த கட்ட போராட்டத்திற்கு நகர்வோம்.

*K. G. ஜெயராஜ்*
*பொதுச்செயலர்.*
Fwd by
*R.ராஜ சேகர்*
*மாநில செயலர்*
AIBDPA TN
28.11.23

(தமிழாக்கம் . நன்றி
தோழர்.T.K பிரசன்னன்
மாநில அமைப்பு செயலர்)

Post a Comment

0 Comments