Latest

10/recent/ticker-posts

சுதந்திரப் போராட்ட தியாகி தோழர். N. சங்கரய்யா மறைவு

சுதந்திரப் போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆன தோழர் N. சங்கரய்யா மறைவு


          சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் N.சங்கரய்யா (வயது 102) வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தமிழகத்தில் இடது சாரி இயக்கத்தை வளர்ப்பதிலும் தொழிலாளர் வர்க்க அரசியலை உயர்த்தி பிடிப்பதிலும் மாணவர் பருவத்தில் இருந்தே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு,  போராடியவர். தீண்டாமை கொடுமைக்கு எதிராக, தொழிலாளர்  நலனுக்கு ஆதரவாக, அரசாங்கத்தின் மக்கள் விரோத தொழிலாளர் கொள்கைகளுக்கு எதிராக தன் வாழ்நாளின் கடைசி நாள் வரையில் குரல் கொடுத்தவர்.
            அவரது மறைவு தொழிலாளி வர்க்கத்திற்கும் இடது சாரி இயக்கத்திற்கும் ஈடுகட்ட முடியாத இழப்பு. அன்னாரது மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி செவ்வணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கம்
தமிழ் மாநிலம்
15.11.23

COM. N. SANKARAIAH (102) LEGENDARY LEADER PASSED AWAY .

CHQ is saddened to report that Com. N Sankaraiah prominent freedom fighter , trade union leader and legendary Communist leader has passed away on 15-11-2023 at Chennai.

The life of Com. N Sankaraiah was completely dedicated to the nation and the people. He started his public life by participating in the freedom struggle when he was a student. He fought valiantly against the British and was jailed several times.

He was elected as an MLA for three times from Madurai East and Madurai West. He was the State Secretary of the CPI (M) during the period from 1995 to 2002.

AIBDPA pays respectful homages to Com. N. Sankariah and conveys heartfelt condolences to the bereaved family and comrades.

K G Jayaraj

தோழர். பிரதாப சந்திரன் என்ற சங்கரய்யா

1. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள்.

2. இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார்.

3. கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் இஞ்சினியராக வேலை பார்த்த போது 1922 ஜூலை 15 தோழர். சங்கரய்யா கோவில்பட்டியில் பிறந்தார்.

4. பிரதாப சந்திரன் என்று மகனுக்கு பெயர் சூட்டினார் நரசிம்மலு. ஆனால் நரசிம்மலுவின் அப்பா எல்.சங்கரய்யா தனது பெயரை பேரனுக்கு வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பிரதாப சந்திரன் என்ற பெயர் சங்கரய்யாவாக மாறியது.

5. தோழர். சங்கரய்யாவோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் 9 பேர். அண்ணன் இராஜமாணிக்கம். தம்பிகள் இராமசாமி, இராமகிருஷ்ணன், இராசேந்திரன். தங்கைகள் லட்சுமி காந்தம்மாள், ஞானாம்பாள்,மீனாட்சி, அங்கம்மாள்.

6. தோழர்.சங்கரய்யா தூத்துக்குடி மேலூர் சி.வ. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். அவரது தந்தை நரசிம்மலு பம்பாய் சென்று பாய்லர் பொறியியல் படித்து வெற்றி பெற்று மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றார். அவரது குடும்பமும் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.

7. மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியில் 9 ம் வகுப்பும், மதுரை யூனியன் கிறிஸ்தவப் பள்ளியில் 10, 11 வகுப்புகள் படித்து 1937 ல் தேர்ச்சி பெற்றார்.

8. மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாறு பாடத்தை விருப்பமாகத் தேர்வு செய்து 1939 ல் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அதே கல்லூரியில் பி.ஏ. கடைசி ஆண்டு வரை படித்தார்.

9.அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக செயல்பட்ட தோழர்.சங்கரய்யா
சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டுகிறார்.

10. 1939 மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

11. அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டு, 1940ல் தோழர். ஏ. கே. கோபாலனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார். மதுரை மாணவர் சங்க செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

12.பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா 1941 மார்ச் மாதம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

13. வேலூர் சிறையில் தான் காமராசர்,கே.பாலதண்டாயுதம்,பட்டாபி சீதாராமையா, அப்துல் ரஹ்மான் சாகிப் ஆகியோரோடு தொடர்பு ஏற்படுகிறது. சிறைக் கொடுமைகளுக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதனால் 1941 ஜூலையில் இராஜமகேந்திரபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

14.காமராஜர் பிரதம செயலாளருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியதன் பேரில் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். 1942 ஜூன் வரை சிறையிலிருந்து பிறகு விடுதலை செய்யப்படுகிறார்.

15.சிறையிலிருந்து விடுதலையானவுடன் சேலத்தில் நடைபெற்ற சென்னை மாகாண மாணவர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் மாகாணத்தின் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.

16. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதையொட்டி திருநெல்வேலியில் நடைபெற்ற மாணவர்கள் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கிறார். போலீஸ் தடியடி நடத்தியதில் காயம் ஏற்படுகிறது.

17. மாணவர் இயக்க வேலைகளைத் திட்டமிட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தில் மாகாண மாணவர் பயிற்சி முகாம் நடத்துகிறார். முகாமை போலீஸ் சுற்றி வளைக்கிறது. மாணவர்களை போராட தூண்டியதற்காக கைது செய்யப்படுகிறார்.

18. 1942 அக்டோபரில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார். அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடந்ததால், கேரளத்தின் கண்ணனூர் சிறைக்கு வெள்ளை அரசு அவரைக் கொண்டு சென்று அடைத்தது.

19.கண்ணனூர் சிறையில் அவர் இருந்த போதுதான் கையூர் தோழர்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து சிறையில் தோழர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார். கண்ணனூரிலிருந்து தஞ்சாவூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்.

20. தஞ்சாவூர் சிறையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆர்.வெங்கட்ராமன், மதுரை வைத்தியநாதய்யர் ஆகியோருடன் இருந்தார். 1944 மேமாதம் விடுதலை செய்யப்படுகிறார். 22 வயது நிரம்பிய அதே 1944 ம் ஆண்டு தான் அவரது தந்தை நரசிம்மலு இறக்கிறார். குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்கும் நிலைக்கு ஆளாகிறார்.

21.1944ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளி வந்தவுடன் மாணவர் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார்.

22. நேதாஜியின் ஐ.என்.ஏ இராணுவத்தினரை கைது செய்யும் வெள்ளை அரசைக் கண்டித்தும், ஜவஹர்லால் நேரு காஷ்மீருக்குள் நுழைய தடை விதித்ததைக் கண்டித்தும் பெரும் போராட்டங்கள் நடந்தது.1946 பம்பாய் கப்பல் மாலுமிகள் நடத்திய புரட்சிக்கு ஆதரவாக மதுரையில் பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் தோழர். சங்கரய்யா.

23. இதே ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி.ஜி.ஜோசி பங்கேற்ற பெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார்.
சங்கரய்யா.

24. அரசை சதி செய்து வீழ்த்த முயற்சி செய்ததாக 1946 ல் மதுரை சதி வழக்கை போட்டது வெள்ளை அரசு. பி. இராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

25. சிறப்பு நீதிபதி ஹசீன் என்பவரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என அறிவிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் பிரமாண்ட வரவேற்பு நடந்தது. மறுநாள் இந்தியா விடுதலை அடைந்தது.

26. கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியை 1947 செப்டம்பர் 18 திருமணம் செய்தார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார்.

27. 1948 மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கரய்யா தலைமறைவாக தமிழகம் திரும்பினார்.1948 முதல் 1951 வரை தலைமறைவாகவே சங்கரய்யா செயல்பட்டார். சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை.

28. கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை விலக்கப்பட்ட பிறகு 1952 தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாக குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

29. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967ல் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

30. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.

31.1962ல் இந்திய-சீன யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு விடுதலையானார்.

32.1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அந்த 35 பேரில் தோழர். சங்கரய்யாவும் ஒருவர். 35 பேரில் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் தோழர். சங்கரய்யா ஆகிய இருவர் மட்டுமே தற்போது நம்மோடு வாழ்கிறார்கள்.

33. சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப்பணியாற்றினார். 1998ல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார்.

34. கல்லூரி மாணவராக இருக்கும்போதே, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, 15 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர், இந்திய இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர், மகத்தான வழிகாட்டி என தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்த மக்கள் தலைவர் தோழர். என். சங்கரய்யா.

35. 2021ல் தமிழ்நாடு திமுக அரசு தகைசால் தமிழர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

சங்கரய்யா என்பது பெயரல்ல
சமதர்மத்தின் சங்கநாதம்.
வீரவணக்கம்.

 



Post a Comment

0 Comments