Latest

10/recent/ticker-posts

இன்னும் இருக்கிறார் யெச்சூரி

 இன்னும் இருக்கிறார் யெச்சூரி








இன்னும் இருக்கிறார் யெச்சூரி

ஈரோடு தமிழன்பன்

இன்னும்
இருக்கிறார் யெச்சூரி
ஏனெனில்
இன்னும் இருக்கிறதே
இளைத்தவர்துயரம்.

ஏழைகள்
கண்களில் இருந்த நெருப்பு
யெச்சூரி!
ஏமாற்றப்பட்டவர்
கைகளில் இருந்த ஏ.கே 47
யெச்சூரி!
எப்படி
ஓய்வெடுக்கப்போவார்?

துடிப்புகள் பிசகிய
பாராளுமன்ற மக்களாட்சியத்தின்
மகத்தான நம்பிக்கையாக
இருந்தவர்
மரணத்தின் காணிக்கைத்தட்டில்
செல்லாத காசாக
விழுவது எப்படிச் சாத்தியம்?

வயதுகளை
வளர்க்கப் பிறந்தவர்அல்லர் அவர்.
மார்சியத்தை வளர்த்துக்
கண்ணீர்க் குடிசைகளுக்கும்
களத்து மேட்டுக்கும்
கொண்டுசேர்க்கும் தொண்டுக்கு
மகனாகப்பிறந்தவர்.
போராட்டம்
முடியவில்லை
போர்வாள் எப்படி உறைக்குத்திரும்பும்?

முற்போக்கு யெச்சூரி
மூச்சு முடிந்து விழவில்லை
அநீதிகளை எதிர்ப்போர்
மூச்சுப் பைகளில்
புயல்களை உசுப்பிக்கொண்டிருக்கிறது

                - ஈரோடு தமிழன்பன்.

Post a Comment

0 Comments