AIBDPA TN 7வது மாநில மாநாடு- திருச்சி
இன்னும் சிவப்பானது,
இரத்தச் சிவப்பணுக்கள்...
சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்க நினைப்போரை,
சங்க நாற்காலியில் நிமிர்ந்து அமர வைத்த இயக்கம்...
முதுமையே துணையென்று முடங்கிச் சுருள முயல்வோரை,
இளமைக்குள் மீண்டும் இழுத்து வரும் சங்கமிது...
அகில இந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கம்...
செயலுக்கும், வயதுக்கும் தொடர்பே தும் இல்லையென
துடிப்பான செயல்திறனால் வகுப்பெடுக்கும் வலிய சங்கம்...
ஏழாவது தமிழ் மாநில மாநாடு...
பொன்னி நதிக்கரையில்,
புத்துணர்ச்சி பொங்கப் பொங்க...
புரட்சிப் பாதையை வகுத்துத் தந்த போராளிகள் படத்துடன் அழைப்பிதழ்...
பாரம்பரியம் மாறாமல்,
தோழர் பஞ்சாபகேசன் நினைவுடன்,
தோரண நுழைவு வாயில்...
கொடியேற்றும் நிகழ்விலிருந்தே கோலோச்சிய கொள்கைப் பற்று...
கொடி காத்த குமரனின் திருப்பூரிலிருந்து தேசியக்கொடி...
நெருப்பு விதைகளாக நெஞ்சில் குடியிருக்கும் வெண்மணி தியாகிகளின் வேரிலிருந்து சங்கக் கொடி...
பொன்மலை பூமியிலிருந்து
தியாக தீபச் சுடர், இரயில்வே பணியாளர்கள் இரத்தச் சிவப்புடன்...
விண்ணதிரும் முழக்கங்களுடன்
வீறு கொள்ளச் செய்த கொடியேற்றம்...
தேசியக் கொடியேற்றிய மூத்த தோழர் CKN,
சங்கக் கொடியேற்றிய பொதுச் செயலர் KGJ...
தியாகத்தின் செம்மல்களுக்கு அஞ்சலி செலுத்தி அரங்கம் நுழைவு...
ஆரணியின் அயராத் தோழன் S M சேகர் பெயராலும், வீரமிகு தோழர் T பழனி நினைவினோடும் விழா மேடை...
ஊசி விழ இடமின்றி நிறைந்திருந்த விழா அரங்கம்...
ஒன்று கூட விடுபடாது,
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சார்பாளர்கள்...
திருச்சி மாநகரின் திகைக்க வைத்த பெருமைகளை எடுத்து இயம்பிய,
வரவேற்புக் குழுத் தலைவர்,
சிஐடியு செயலாளர்
தோழர் சீதரனின் வரவேற்புரை....
தூத்துக்குடி நகரில் தோள்களில் ஏற்ற பொறுப்பை,
தூக்கம் துறந்து,
ஓய்வு மறந்து,
துடிக்கும் இருதயமாய் நொடிப்பொழுதும் ஓயாது,
சிறப்பான செயல் திறனால் சிந்தையில் நிறைந்திருக்கும்,
மாநிலச் செயலர் தோழர் ராஜசேகர் வரவேற்புரை...
இந்திய வரைபடத்தின் எங்கெங்கும் கிளைகள் கொண்ட, ஆல் போல் தழைக்கும் சங்கம்,
அனுதினமும் வளரும் சங்கம்,
AIBDPA சங்கத்தை,
எழுச்சியுடன் வழி நடத்தும்,
இளமைத் துடிப்பு மிக்க அடலேறு,
அகில இந்திய
பொதுச் செயலாளர்,
அருமைத் தோழர் K G ஜெயராஜ்,
செறிவான கருத்துக்களுடன் சிறப்புரையாற்றி
மாநாட்டை துவக்கி வைத்தார்...
நமது போராட்டப் பாதையையும், பார் போற்றும் சாதனைகளையும், மலையாள ஆங்கிலத்தில் நமது மனதிற்குள்ளே புகுத்திச் சென்றார்...
சிங்கத்தின் கர்ஜனையை செவிகளுக்குள் ஒலிக்கச் செய்தார்...
எழுச்சிமிகு உரை என்றால் என்னவென
உணர வைத்தார்,
அகில இந்திய சிஐடியு வின் மாபெரும் துணைத் தலைவர்
தோழர் A K பத்மநாபன்...
முறை கெட்ட ஒன்றிய அரசின் முகத் திரையை கிழித்தெடுத்தார்...
வர்க்கக் கடமையினை வகுப்பெடுத்து விளக்கிச் சென்றார்...
வருமா? வராதா? என வழக்காடு மன்றங்கள்...
ஏழாண்டாய் ஏறி இறங்கும் ஊதிய மாற்றப் பேச்சு...
அங்கீகார சங்கம் BSNLEU மீது
சேற்றை வீசும் அவதூறுகள்...
எல்லாம் பறந்தோட,
என்ன நிலை என விளங்க,
தெள்ளிய நீரோடையாய் தெளிவான உரை தந்தார்,
BSNLEUவின்
அகில இந்திய உதவிச் செயலர் அருமைத் தோழர் செல்லப்பா...
மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் மோகன்தாஸ்,
அமைப்புச் செயலர் தோழர் வெங்கட்ராமன்,
துணைப் பொருளாளர் தோழர் சீதாலட்சுமி,
சென்னை தொலைபேசி செயலர் தோழர் கோவிந்தராஜ்,
BSNLEU மாநிலச் செயலர் தோழர் ராஜூ,
AIRPA மாநிலச் செயலர் தோழர் மோகன்,
TNTCW மாநிலச் செயலர் தோழர் சையத் இத்ரீஸ்,
இவர்களின் உரை வீச்சால் எழிலானது காலை நிகழ்வு...
பிற்பகல் அமர்வினிலே
மாநில சங்கத்தின் மலைக்க வைத்த பணிகளைத் தொகுத்து,
செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தார் மாநிலச் செயலர்...
எதுவும் விடுபடாது, எல்லாவற்றையும் உள்ளடக்கி, மாநில சங்க செயல்பாட்டின்
வரலாற்று ஆவணமாய் வடிவமைந்த செயலறிக்கை...
நிதி வருவாய் மூலத்தையும், நேரிட்ட செலவுகளையும்,
ஆண்டுக் கணக்காக அறிவித்தார்,
மாநிலப் பொருளாளர் தோழர் நடராஜா...
செயலறிக்கை மீதும்,
சங்க அமைப்பு நிலை குறித்தும்,
ஆரோக்ய விவாதம்...
எல்லா மாவட்டத்திலும் எடுத்து வைத்த வாதங்கள்...
43 பிரதிநிதிகளின் நாவண்மையை நாம் சுவைத்தோம்...
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும்,
ஏகப்பட்ட சந்தேகங்களுக்கும்,
பொறுப்புடன் பதிலுரைத்த மாநிலச் செயலர் ராஜசேகர்...
நிதி நிலையை படம் போட்டு,
வரும் கால வருவாய்க்கு வழி போட்டு,
நிதி நிலை அறிக்கையினை நிறைவு செய்த மாநிலப் பொருளாளர் தோழர் நடராஜா...
சார்பாளர் தோழர்களின் சத்தமான கரவொலியுடன், ஏற்றுக்கொள்ளப்பட்டன
இரண்டு அறிக்கைகளும்...
நிமிடங்களில் முடிந்தது
நிர்வாகிகள் தேர்வு...
கருத்தொருமித்தலின் காட்சியாய் அது திகழ்ந்தது...
ஆலோசகராய் தோழர் CKN,
தலைவராய் தோழர் ஞானசேகரன், மாநிலச் செயலாராய் மீண்டும் தோழர் ராஜசேகர்,
பொருளராய் தோழர் இளங்கோ உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒரு மனதாய்த் தேர்வானது...
ஓடி வந்து இரயில் பெட்டியில் ஏறும் கடைசிப் பயணியாய், எனக்கும் சிறு இடம் கிடைத்தது உதவிப் பொருளாளராக...
BSNL நிறுவனம் உயிர்ப்புடன் இருக்க உடனடியாய் 4G சேவை வழங்கக் கோரியும்,
ஊதிய மாற்றத்தையும், ஓய்வூதிய மாற்றத்தையும் உடனடியாய் வழங்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேறின...
நாவின் சுவை நரம்புகளை சுண்டி இழுத்து,
வயிற்றையும் குடலையும் வருத்தி வதைக்காது, தொண்டை வரையிலும் நின்று பேசியது,
இரண்டு நாட்கள் உண்ட உணவு...
உறைவிடம்,உண்டி,
உற்சாக வரவேற்பு என,
அனைத்திலும் அமர்க்களம்...
இவை வரவேற்புக் குழு கைவண்ணம்... இதயம் மகிழ்ந்து, சிறப்பைப் புகழ்ந்து, செவ்வணக்கம் சொல்வோம் வரவேற்பு குழுவினருக்கு...
உணர்வுகளில் சங்க முழக்கம்,
இரத்த அணுக்களிலே சிவப்புத் தாக்கம்,
கோரிக்கைகள் ஈடேற போராட்டத் திட்டம்,
அடுத்த மாநாடு நோக்கி,
இவை அபரிதமாய்ப் பல்கிப் பெருகும்...
சிறப்பான மாநாட்டில் பங்கேற்ற திருப்தியுடன் பயணம்,
திருவண்ணாமலை நோக்கி...
புரட்சி வாழ்த்துக்களுடன்,
ப சரவணன்✍️
மாநில உதவிப் பொருளாளர்,
திருவண்ணாமலை.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
0 Comments