Latest

10/recent/ticker-posts

19-1-1982 திருமெய்ஞானத் தியாகிகளின் அடிச்சுவட்டில்

 AIBDPA TN செய்தி

19-1-1982 திருமெய்ஞானத் தியாகிகளின் அடிச்சுவட்டில்

          (1980) எண்பதாம் ஆண்டுகளில் இந்தியாவில் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (ஐஎம்எப்) கட்டளைக்கிணங்க மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசத்தின் சுயசார்பும் ஒருமைப்பாடும் அபாயத்தில் சிக்கின. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்ததுடன் உலகவங்கி மற்றும் ஐஎம்எப் இடமிருந்து கடன் பெறுவதற்காக அவை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டது.

         1982ல் நடைபெற்ற அந்த முதலாவது பொது வேலை நிறுத்தத்தில் பலியான 10 தோழர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாளான ஜனவரி 19ம் தேதியை தொழிலாளர்- விவசாயி ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்க வேண்டுமென சிஐடியு அறைகூவல் விடுத்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

             மத்திய ஆட்சியாளர்களின் தவறான புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அதை அடியொற்றிய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், மறைமுக வரிகளை உயர்த்தியும், ரயில் கட்டணம்- பால்கட்டணம்-சரக்குக் கட்டணம்-பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியும் மத்தளம் போல் மக்களை இரு பக்கமும் தாக்கினர் மத்திய, மாநில ஆட்சியாளர்கள். ஏற்றுமதியை விட இறக்குமதி கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய் கூடுதலாக இருந்தது. உள்நாட்டு கனரக இயந்திரத் தொழில் கடும் நெருக்கடிக்குள்ளாகியது. ஆக உள்நாட்டிலும் கடன் பொறி, வெளிநாட்டிலும் கடன் பொறி, அரசாங்க கஜானா திவால். இதிலிருந்து எழும் சுமைகளை உழைப்பாளி மக்களின் தலையில் சுமத்த மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் விரோத- மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வலுவாக நடைபெற்ற காலம் அது.

.            சிஐடியு உள்ளிட்ட எட்டு மத்திய தொழிற் சங்கங்களும் 40-க்கும் மேற்பட்ட தொழில்வாரியான சம்மேளனங்களும் இணைந்து தேசிய பிரச்சாரக்குழு உருவாக்கப்பட்டு 1981ஆம் ஆண்டில் ஜூன் 4ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற சிறப்பு மாநாடு ‘‘தில்லியில் அணிவகுப்போம்’’ என்று முடிவு செய்தது. அறைகூவலை ஏற்று 1981 நவம்பர் 23 ல் நடைபெற்ற பேரணி தொழிற்சங்க -தொழிலாளி வர்க்க ஒற்றுமையின் மகத்தான வெளிப்பாடாக அமைந்தது. இது நம்நாட்டு தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

.              பல்வேறு தொழில்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்களைச் சார்ந்த தொழிலாளர்களும்-ஊழியர்களும் இவ்வளவு பெரியஎண்ணிக்கையில் திரண்டு வந்து தலைநகரில் ஆர்ப்பரித்தது முன் எப்போதும் நடந்திராத ஒரு நிகழ்வாகும். இந்த ஆர்ப்பாட்டத்தின் அணிவரிசையில் பொதுத்துறை-தனியார்துறை, ரயில்வே, பாதுகாப்பு, மத்திய-மாநில அரசு ஊழியர் அமைப்புகள், இரும்பு, நிலக்கரி, சுரங்கம், சணல், ஜவுளி, இன்ஜினியரிங், போக்குவரத்து, மின்சாரம் போன்ற நிறுவனப்படுத்தப்பட்ட தொழில்களிலிருந்தும், தோட்டம், கைத்தறி, பீடி, கட்டுமானம், சுமை உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் அலைஅலையாய் திரண்டனர். உழைக்கும் பெண்களின் மிகப் பெரிய அணிவகுப்பு; அவரவர் தொழிற்சங்கப் பதாகைகளுடன் கலந்து கொண்டது தொழிற்சங்க இயக்கத்தின் இன்னொரு புதிய விழிப்பாகும். பேரணியின் முடிவில் 1982 ஜனவரி 19 அன்று ஒரு நாள் அகில இந்திய கண்டன வேலை நிறுத்தம் மேற்கொண்டு அரசின் கொள்கைகளை நிராகரிக்குமாறு 1981 நவம்பர் 23 பேரணி அறைகூவல் விடுத்தது.

               ஜனவரி 19 அன்று வேலைநிறுத்த அறைகூவலை ஏற்று  வெளிப்பட்ட ஒற்றுமை, தொழிற்சங்க வரலாற்றிலேயே அதற்கு முன் கண்டிராதது. முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு பல இடங்களில் இந்த வேலைநிறுத்தம் பந்த் ஆக மாறியது.

ஜனவரி 19 வேலைநிறுத்த நாளன்று நாடுமுழுவதும் 10 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடிய விவசாய இயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசு தன் துப்பாக்கி முனையை நீட்டியது. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு  தியாகச்செம்மல்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் மூவரும் பலியானார்கள்.

.   மேலும் பெருமாள்நல்லூர், பிச்சங்கட்டளை, சீதை சிந்தாமணி, கண்ணங்குடி-சவுரியார்புரம், காலமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையினர்  உள்ளே புகுந்து, ஆண்-பெண், குழந்தைகள் உட்பட அனைவரையும் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். குடிசை வீடுகளிலிருந்த பண்டபாத்திரங்களையும் நொறுக்கி நாசமாக்கி சூறையாடினர். நூற்றுக்கணக்கான தோழர்கள் பெரும் காயமுற்றனர்.

             திருமெய்ஞானம் வழக்கு மயிலாடுதுறை சப்கோர்ட்டில் சில ஆண்டுகள் நடைபெற்றது. குற்றத்தை நிரூபிக்க இயலாத நிலையில் 27.03.1989 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மூன்று  உயிர்களின் பலிக்கான நீதியும் நியாயமும் புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என போற்றப்படும் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் காலவதியாகிப் போனது என்பதே கசப்பான வரலாறு.

.          மோடி தலைமையிலான பத்தரையாண்டுக்கால பா.ஜ.க.அரசின் படுபிற்போக்குத்தனமான கொள்கைகளால் இந்தியாவின் சகலபகுதி உழைக்கும் மக்களும், வேலையில்லா இளைஞர்களும் வரலாறு காணாத அளவில் பெரும் பாதிப்புக்களுக்கு ஆளாகினர். எனவேதான் இந்தியத் தொழிளி வர்க்கம் ஆண்டுதோறும்  பல கோடிப்பேர் பங்கேற்புடன் அகில இந்திய வேலை வேலை நிறுத்தம் செய்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. எனினும் மத்திய அரசின் போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

       1982 -  ஜனவரி 19ல் பலியான தியாகிகளை நினைவு கூறலும் அத்தியாகத்தடத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமையை உருக்கெனக் கட்டலும் ஒற்றுமையைக் குலைக்க ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கவும்

.      அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வை வழிமறிக்கும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் போராட்டங்கள் கூர்மையடைந்து வெற்றி காணவும் அயராது உழைப்போமாக.

(ஜனவரி 19: திருமெய்ஞானத் தியாகிகள் நினைவு நாள்)

.---பெரணமல்லூர் சேகரன்

Post a Comment

0 Comments