AIBDPA TN செய்தி - விழித்தெழு மோடி அரசே - தோழர். V.A.N.நம்பூதிரி.
கும்பகர்ண உறக்கத்தில் இருக்கும் மோடி அரசே, விழித்தெழுந்து BSNL - DOT ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய மாற்றப் பிரச்சினையைத் தீர்த்து வை!!...
தோழர். V.A.N.நம்பூதிரி.
குழந்தைகள் மற்றும் முதியவர்களைத் துன்புறுத்துவதை விட மிகக் கொடிய குற்றம் எதுவும் இல்லை என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் இரக்கமற்ற மோடி அரசோ இதைத்தான் செய்துகொண்டுள்ளது.
சுமார் நான்கு தசாப்தங்களாக நாட்டிற்கும் மக்களுக்கும் அயராது சேவை செய்த BSNL - DOT ஓய்வூதியர்களை இரக்கமற்ற மோடி அரசு துன்புறுத்தி வருகிறது.
ஓய்வூதியம் பெறுவோரின் வயோதிக காலத்தில், அவர்களுக்கு ஆளும் ஒன்றிய அரசிடமிருந்து எந்த வித சிறு உதவியும் கிடைக்கவில்லை. உதவி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச நீதியும் கிடைக்கவில்லை. ஆளும் அரசாங்கமோ ஓய்வூதிய மாற்றப் பிரச்சினையில் அயர்ந்து உறங்கிக் கொண்டே இருக்கிறது.
3-வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரைகளின் படி 15% பொருத்துதலுடன் கூடிய ஓய்வூதிய மாற்றம் 01.01.2017 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2-வது ஊதிய திருத்தக் குழு பரிந்துரைத்தபடி கடைசி ஓய்வூதிய திருத்தம் 30% பொருத்துதலுடன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது BSNL நட்டத்தில் இயங்குவதாகக் கூறி BSNL ஊழியர்களுக்கு 01.01.2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய மாற்றம் வழங்கப்படவில்லை அதனால் ஓய்வூதிய மாற்றமும் வழங்கப்படவில்லை என்ற அரசாங்கத்தின் வெற்று வாதம், ஓய்வூதிய மாற்றத்துடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதது. ஏனெனில் ஓய்வூதியம் ஒன்றிய அரசுத் துறையான DOTயால் வழங்கப்பட்டுக் கொண்டுள்ளது. இதற்கான தொகையானது, ஓய்வூதியர்கள் ஊழியர்களாக இருந்தபோது செலுத்தப்பட்ட ஓய்வூதிய பங்களிப்பு தொகையின் மூலமாகவே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிதியும் அதிக அளவிலான நிதியாகவே அரசாங்கக் கையிருப்பில் உள்ளது.
ஓய்வூதிய திருத்தத்தை அமல்படுத்தாமல் தாமதிப்பதற்கு எந்தவிதமான தார்மீக காரணமோ, நியாயமோ இல்லை. இது ஓய்வூதியதாரர்களை வஞ்சிப்பதாகவும் அவர்களின் வாழ்க்கைத் திறனை சீரழிப்பதாகவும் உள்ளது. இந்தக் காலதாமதமும் மறுப்பும் 1982 ஆம் ஆண்டு 'நகரா வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது.
01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் பெற தகுதியுடைய ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்கள், தங்கள் உரிய சலுகைகளைப் பெறாமலேயே இறந்துவிட்டனர். குடும்ப ஓய்வூதியமும் அந்த அளவுக்குக் குறைக்கப்பட்டே வழங்கப்பட்டுக் கொண்டுள்ளது.
அரசிற்கு வரியாக வரவேண்டிய லட்சக்கணக்கான, கோடி ரூபாய்களை பெருநிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்து தாராளமாகக் குறைத்த மோடி அரசு, ஏழை ஓய்வூதியதாரர்களை கொள்ளையடித்துக் கொண்டுள்ளது . இது மன்னிக்க முடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பங்கேற்ற AIBDPA தலைமையிலான நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியும், ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட தர்ணாவும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
சில சங்கங்கள் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம்கோரி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, ஓய்வூதிய மாற்றத்தினை தாமதிப்பது அருவருக்கத்தக்கதும், ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும். அந்தச் சங்கங்கள் பலவீனமான வாதத்துடன் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், BSNL - MTNL ஓய்வூதியதாரர் சங்கங்களின் ஒன்றிணைந்த நமது தலைமையிலான கூட்டமைப்பின் போராட்டங்களில் இணைந்து போராடியிருந்தால், விரைவில் தீர்வு காண அரசாங்கத்தின் மீது அதிக நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருந்திருக்கலாம்.
AIBDPA மற்றும், BSNL MTNLன் பிற ஓய்வூதியதாரர் அமைப்புகள், 01.01.2017 முதல் 15% ஃபிட்மென்ட் உடன் ஓய்வூதிய மாற்றத்தை இனியும் தாமதிக்காது வழங்க வேண்டும் என்று போராடி வருகிறது .
இதற்கு செவிமடுக்காவிடில், இந்த அராஜக அரசாங்கம் நமது வலுவான இயக்கங்கள் மூலம் பெரும் போராட்ட புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
0 Comments